Saturday 2 May 2020

அடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்

ரா.தங்கமணி
நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமா கலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களை உருவாக்கி தந்துள்ளது.

சினிமா துறையில் தான் கொண்டாடப்பட வேண்டுமானால் ரசிகர் பட்டாளம் மிக முக்கியமானது என்பதே உச்சம் தொட்ட நடிகர்களின் எழுதப்படாத விதியாகி போனது.

ஆனால் அந்த விதியை மாற்றி ரசிகனின் பின்னால் மறைந்திருப்பதை விட ரசிகனால் கொண்டாடப்படும் ஒருவனாய் உருவெடுக்க முடியும் என்பது சாத்தியம் என்றால் அந்த புகழ் அனைத்தும் 'தல' என்று ரசிகரால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரையே சாரும்.

ஆம்... ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னை சுற்றி அரசியல் நடப்பதை விரும்பாத ஏ.கே. எனும் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்பது வரலாறு.

ரசிகர் மன்றம் இல்லையென்றாலும் இன்றளவும் கோடானக்கோடி ரசிகர்களை கொண்ட திரை ஜாம்பவனாக அஜித்குமார் திகழ்வதற்கு காரணம் உழைப்பு... உழைப்பு... உழைப்பு ஒன்று மட்டுமே ஆகும்.

திரை பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் நுழையும் அதே காலகட்டத்தில் எவ்வித திரைபின்புலன்களும் இன்றி திறமையை மட்டுமே முன்னிறுத்தி திரையுலகில் கால்தடம் பதித்தார்.

சினிமாவின் முதல் அறிமுகம் தெலுங்கு மொழி என்றாலும் பின்னர் அமராவதி எனும் திரைப்படத்தின் வழி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

ஆசை, காதல் கோட்டை, வாலி, முகவரி, தீனா, அட்டகாசம், வில்லன், சிட்டிசன் என மாஸ் கலந்த திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கான அடித்தளத்தை ஆழமாக பதிவு செய்தார்.

'தீனா' படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட 'தல' எனும் அடைமொழியே பின்னாளில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மந்திரச் சொல்லாக மாறி போனது.

இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும் தனது பாணி எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு ரசிகனை திருப்திப்படுத்த வேண்டும் எனும் முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக் மூலம் தனது மாஸான கேரக்டரை வெளிபடுத்தினார்.

வீரம், வேதாளம், விஸ்வாசம் திரைப்படங்களின் வழி ரசிகனை மட்டும்  திருப்திப்படுத்தாமல்  தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரையும் கரை சேர்த்தார்.

தன்னை சுற்றி அரசியல் நடப்பதையும் நடத்தப்படுவதையும் விரும்பாத ஏ.கே. ' பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்வில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி முன்னிலையிலே மேடையேறி இந்நிகழ்வுக்கு வரச்சொல்லி கலைஞர்கள் மிரட்டப்படுவதாக துணிச்சலுடன் கூறினார். அஜித்தின் இந்த துணிச்சல் உரையை ஆதரிக்கும் வகையில. ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றது அன்றைய தமிழக அரசியலில் முக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது.

தன்னுடைய உழைப்பை மட்டுமே அடித்தளமாக கொண்டு இன்றைய உச்சத்தை தொடுவதற்கு அஜித், கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை.

தன்னம்பிக்கையை பிரதானமாகக் கொண்டு முன்னேற துடிப்பவர்களுக்கு என்றுமே முன்னுதாரணமாய் திகழ்பவர் அஜித்குமார்.

மன 'வலிமை' படைத்தவனால் மட்டுமே பல்வேறு தோல்விகள், காயங்கள், இன்னல்களை கடந்து   சாதிக்க  முடியும் என்பதை நிரூபித்த உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது உங்களின் 60ஆவது படமான 'வலிமை'க்காக தமிழ் சினிமாவும் தமிழ் ரசிகர்களும் காத்துக் கொண்டிருப்பது...

#HappyBirthdayThala

No comments:

Post a Comment