Thursday 28 May 2020

இந்தியர் பிரதிநிதி நியமிக்கப்படாமல் இருப்பது ஏன்?

ரா.தங்கமணி

ஈப்போ-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பேராவிலும் ஆட்சி மாற்றம் கண்டுள்ள சூழலில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னமும் கேள்வியாக எழுந்து வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் பேரா மாநில அரசில் மஇகாவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இராஜு ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

அதன் பின்னர் 2008இல் நடந்த தேர்தலில் நடந்த தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றப் பின்னர் இந்தியருக்கான பிரதிநிதியாகவும் இருந்து வந்தார்.

10 மாத ஆட்சிக்கு பின்னர் மீண்டும் தேசிய முன்னணி பேரா மாநிலத்தை கைப்பற்றியவுடன் இந்தியர் பிரதிநிதியாக டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்தார். 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டத்தோ வ.இளங்கோ மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்து வந்தார்.

இதுபோதாதென்று மாநில சபாநாயகராக டத்தோ ஆர்.கணேசன், டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தப் பின்னர் சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங்கின் சிறப்பு அதிகாரியாகவும் பொறுப்பு வகித்து வந்தனர்.

ஆனால் இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைத்துள்ள நிலையில் இந்தியர் விவகாரங்களுக்கான பொறுப்பாளாரை நியமனம் செய்யாதது இம்மாநில இந்தியர்களிடையே ஏமாற்றமாக உள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்  ஆதி.சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக  நியமிக்கப்பட்டு அவரின் கீழ் இந்தியர் விவகாரங்கள் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் பேரா மஇகாவின் கோரிக்கைக்கு ஏற்ப மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் நியமனம் செய்யப்படலாம் என ஆவல் எழுந்த நிலையில் இப்போது இந்தியர் பிரதிநிதியாக யார் மாநில அரசில் யார் இடம்பெறவுள்ளனர்? என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியர் பிரதிநிதியை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ பைசால் அஸுமு நியமனம் செய்வதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பதற்கு விடை கிடைக்குமா?

No comments:

Post a Comment