Friday 15 May 2020

பிகேஆர்,ஜசெக கட்சிகள் இன்னுமா மகாதீரை நம்பிக் கொண்டிருக்கின்றன?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு அச்சாரமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரை பிகேஆர், ஜசெக கட்சிகள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என்று மலேசியர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த ஈராண்டுகளாக ஆட்சி செய்தது.

பிரதமர் பதவி விவகாரத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெர்சத்து, பிகேஆர் ஆகிய கட்சித் தலைவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷன் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன் பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி வகித்து வருகிறார்.

தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் துன் மகாதீர் ஆவார்.

துன் மகாதீர் நினைத்திருந்தால் ஷெராட்டன் ஹோட்டல் நாடகத்தை தவிர்த்திருந்தால், கூட்டணி ஆட்சிக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவிகளை களையெடுத்திருந்தால் இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்திருக்காது.
எல்லா நாடகத்தையும் அரங்கேற்றி விட்டு இப்போது ஏதும் அறியாததுபோல் கபட வேடமிடும் துன் மகாதீடை இன்னமும் பிகேஆர், ஜசெக கட்சிகள் எப்படி நம்பிக் கொண்டிருக்கின்றன?

உண்மையை சொல்லப்போனால் துன் மகாதீருடன் இன்னமும் கூட்டணி வைத்திருப்பதை பிகேஆர், ஜசெகவின் அடிமட்ட உறுப்பினர்கள் துளியளவும் விரும்பவில்லை.

ஈராண்டுகளில் பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைப்பதற்கு எத்தனை முறை அந்தர் பல்டி அடித்தார் என்பதை நாடே அறியும்.

இன்னமும் துன் மகாதீரையே பிகேஆர், ஜசெக கட்சிகள் நம்பிக் கொண்டிருந்தால் பக்காத்தான் ஹராப்பானுக்கும் அக்கட்சிகளுக்கும் என்றுமே எதிர்காலம் இல்லாமல் போகலாம்.


No comments:

Post a Comment