கோலாலம்பூர்-
தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.
ஏறத்தாழ ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய முருகன் ஆலயங்களில் இரத ஊர்வலம், காவடிகள், என விமரிசையான திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் இந்த முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக முற்றிலும் நம்மால் எப்போதும்போல் கொண்டாடப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுவும் இறைவனின் சித்தம் என ஏற்றுக் கொள்வோம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
நமது இந்து சமயம் என்பது ஆலயங்களுக்கு செல்வதை மட்டும் நமக்கு போதிக்கவில்லை. காவடிகள் எடுப்பது, பால்குடம் எடுப்பது, ஆலயங்களில் பூஜைகள் நடத்துவது போன்றவற்றை மட்டும் இந்து மதம் போதிக்கவில்லை.
விளம்பரம் |
மாறாக, உள்ளமே ஆலயம் எனச் சொல்வதும் இந்துமதம்தான். ஒவ்வொரு இல்லத்தையும் தூய்மையாகவும் பக்திமயமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் இந்து மதம்தான்.
அதை நினைவில் நிறுத்தி இந்த முறை நாம் நமது குடும்பத்தினரோடு, தைப்பூசத் திருவிழாவை இல்லங்களில் கொண்டாடுவோம், முருகப் பெருமானை நினைத்து, கொவிட்-19 தொற்றுகளால் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களும், பிரச்சனைகளும் தீரவேண்டுமென மனமுருக வேண்டிக் கொள்வோம்.
இந்தத் தைப்பூசத் திருவிழாவை வாழ்க்கையின் ஒரு வித்தியாச அனுபவமாக கொண்டாடி மகிழ்வோம்.
நாடும் நமது இந்திய சமூகமும், நமது சக மலேசிய இனத்தவர்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்போடும், வளத்தோடும் வளர்ச்சி காண நாமனைவரும் முருகப் பெருமானை இந்தத் தைப்பூச நன்னாளில் வேண்டிக்கொள்வோம்.
அதே வேளையில், நாடு முழுமையிலும் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளையும், நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பக்கம் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் அதை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரமாக எடுத்து வருகிறது.
கூடியவிரைவில் நமது நாட்டில் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசிகளைப் போடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொவிட்-19 தொற்று நாட்டில் குறையும் என எதிர்பார்க்கலாம்.
எனவே, அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கேற்ப இந்த ஆண்டு தைப்பூசத்தைக் கொண்டாடி மகிழ்வோம் என்று தமறிக்கையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment