Monday 23 October 2017

'சமூக உருமாற்று மையங்களாக ஆலயங்கள்' - திட்டத்தை தொடக்கி வைத்தார் டத்தோ சுப்ரா

பெஸ்தாரி ஜெயா-
இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் சமூக கடப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வுக் காண முடியும். அதற்காக அரசாங்கம் "சமூக உருமாற்று மையங்களாக ஆலயம்" எனும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அரசாங்கம் அறிவித்துள்ள மலேசியர் இந்தியர் பெருந்திட்டமான புளுப்பிரிண்டில் பல்வேறு சிறப்பு செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் இன்று அறிமுகம் காணவுள்ள "சமூக உருமாற்ற மையங்களாக ஆலயம்" எனும் திட்டமாகும்.

இத்திட்டமானது ஆலயங்களின் சமூகப் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதாகும். இதன் மூலம் சமூகத்தில் அதிகரித்துவரும் சமூக சீர்கேட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
ADVERTISEMENT

இத்திட்டத்தின் வழி, ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் செயல்படாமல், கல்வி மையங்களாகவும், தகவல் தொழில்நுட்ப மையங்களாகவும், சமய பண்பாட்டினை வளர்க்கும் தலங்களாகவும் உருமாற்றம் பெற்று சிறார்கள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவர் என சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்போது சுகாதார அமைச்சருமான அவர் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தின் முதல் முயற்சியாக பத்தாங் பெர்ஜூந்தை ஸ்ரீ தண்டபாணி ஆலயம், கம்போங் பண்டான் ஸ்ரீ கணேசர் ஆலயம், கோலகங்சார் ஸ்ரீ கணேசர் ஆலயம், மாசாய் ஸ்ரீ சுப்பிரமணியம் பரிபாலன சபை, சுங்கை பட்டாணி ஸ்ரீ ருத்ர வீரமுத்து மாரியம்மன் ஆலயம், பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் என ஆறு ஆலயங்கள் பரீட்சார்த்த முறையில் சமூக உறுமாற்று மையங்களாக செயல்பட உள்ளன என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், நாடு முழுவதும் ஏறத்தாழ 2,500 (இந்து சங்கத்துடன்) பதிவுப் பெற்ற கோயில்கள் உள்ளன. மற்ற சமயங்கள் போன்று நமது கோயில்களும் சமூகத்துக்குத் தேவைப்படுகின்றவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவ முன்வர வேண்டும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.
ADVERTISEMENT

மேலும் பேசுகையில், "எனது முக்கியமான பொழுது போக்கு ஆலயங்களுக்குச் செல்வதாகும். அப்படி ஆலயங்களுக்குச் செல்லும் போது குறிப்பாக ஆலய வழிபாட்டின் பொழுது இளைஞர்கள் ஆலயத்தின் வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. சமூகத்தில் இந்நிலை மாற வேண்டும். இத்திட்டம் வெற்றிப்பெற நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் எங்களோடு ஒத்தழைக்க வேண்டும்" என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், செடிக்கின் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன், பெஸ்தாரி ஜெயா, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு. பழனியப்பன், கோலசிலாங்கூர் மஇகா தொகுதித் தலைவர்  ஜீவா குமாரசாமி, மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான், ஈஜோக் சட்டமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர்  பார்த்தீபன் உட்பட ஆலய, சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment