Saturday 14 October 2017

டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் தீபாவளி அன்பளிப்பு

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் பள்ளியில் வசதி குறைந்த நிலையிலான மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
90 விழுக்காடு இந்திய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த பள்ளி நிர்வாகப் பிரிவு துணை முதல்வர் சுந்தரலிங்கம் முனுசாமி, கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வின் மூலம் பல மாணவர்கள் தங்களது தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாது பல நல்லுள்ளங்களின் ஆதரவோடு மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வின் மூலம்  பல மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவதாகவும் இந்த ஆதரவு இன்னும் தொடரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய சிறப்பு பிரமுகர் தொழிலதிபர் யோகேந்திர பாலன், ஒவ்வொரு வருடமும் இப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர் எனும் முறையில் இப்பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளேன்; இனியும் செய்து வருவேன்.  அதே வேளையில் வரும் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சியை பெறும் மாணவர்களுக்கு தனது குடும்பத்தின் சார்பில் தலா ஒருவருக்கு 1,000 வெள்ளி வழங்கப்படும் என 'தீபாவளி பரிசாக' அறிவித்தார்.
கல்வியில் சிறப்பான தேர்ச்சியை பெற்று வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். அதற்கேற்ப மாணவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என கூறிய யோகேந்திரபாலன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 125 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கும் டோவன்பி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் இப்பள்ளியில் பணிபுரியும் மூன்று பணியாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பள்ளி முன்னாள் முதல்வர் துங் யு வெய்,  மாணவர் நல துணை முதல்வர்   கோ.நடராஜா, கோலகங்சார் மாவட்ட கல்வி இலாகா பிரதிநிதி கைரில் ஹம்ரி,  சுங்கை சிப்புட் தொகுதி மஇகா  செயலாளர் கி.மணிமாறன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மகேந்திரன், யோகேந்திரபாலனின் துணைவியார் திருமதி வர்ஷினி,  லிங்கேஸ்வரன், அமுசு.பெ.நித்தியானந்தா ஜவாஹர், மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி, கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் நடராஜா, கோலகங்சார் மாவட்ட ஒற்றுமை துறை இலாகா அதிகாரி அசோக்குமார் உட்பட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment