Tuesday 31 October 2017

'செடிக்' பணம்: 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்துள்ளா?

ரா.தங்கமணி

ஈப்போ-
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக செடிக் அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக இந்திய சமுதாயத்தை சென்றடைந்ததா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்தது முதல் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தேவைகளையும் அரசு அனுகூலங்களையும் மஇகா மட்டுமே நிர்வகித்து வந்தது. ஆனால் மஇகா அதனை முறையாக செய்யவில்லை என்பதால் இந்திய சமுதாயம் முன்னேற்றம் காணாமல் பின்தங்கியே கிடந்தது.

அந்த ஏமாற்றத்தின்  வெளிப்பாடே 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியாகும். அந்த பேரணியில் திரண்டு எதிரொலித்த மக்களின் குரலே மஇகாவையும் தேசிய முன்னணியையும் ஆட்டம் காணச் செய்தது.

அதன் பின்னர் டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இந்தியர் சமூக மேம்பாட்டு சிறப்பு செயலகத்தை (செடிக்) உருவாக்கி அதன் மூல  இந்திய சமுதாயம் மேம்பாடு காண்பதற்கான மானியங்களை ஒதுக்கினார்.
கடந்த 2014 முதல் 2017 வரை 230 மில்லியன் வெள்ளியை செடிக் அமைப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  5 லட்சம் இந்தியர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் எனவும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கூறியுள்ளார்.

உண்மையிலேயே செடிக்  அமைப்பிற்கு வழங்கப்பட்ட நிதி 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்துள்ளதா? என கேள்வி எழுப்பிய சிவகுமார், நாட்டிலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கின்ற சூழலில் இந்த தொகை நான்கில் ஓர் இந்தியரை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் சென்றடைந்ததா?
பொந்தோங் பொது மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பேரணி நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவகுமார், செடிக் பணம் எத்தனை இந்தியர்களை சென்றடைந்தது என கூட்டத்தில் இருந்த 5000 பேரை நோக்கி கேள்வி எழுப்புகையில் யாரும் 'ஆம்' பதிலளிக்கவில்லை.

இங்கு கூட்டத்தில் உள்ள ஓர் இந்தியரை கூட செ ன்றடையாத செடிக் பணம் 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்தது என கூறுவது ஏமாற்று வேலையாகும்.
ஆதலால் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக அவர்களை சென்றடைந்தத? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என பேராக் ஜசெக துணைத் தலைவருமான சிவகுமார் கூறினார்.

No comments:

Post a Comment