Friday 13 October 2017

'62 தமிழ்ப்பள்ளிகள்; 3,000 மாணவர்கள்' - வெற்றிகரமாக நிறைவேறியது 'ஒரு மாணவர் ஓர் அகராதி' திட்டம்

ரா.தங்கமணி

ஈப்போ-
இன்றைய நாட்டின் சூழலில் இந்திய சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்கு கல்வியே அடித்தளமாகிறது. அந்த கல்வியை இன்றைய மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டியது ஒரு கட்டாய சூழலாக உருமாறியுள்ளது.

மாணவர்களிடையே கல்வியாற்றலை எளிய முறையில் புகுத்திடவும் மாணவர்களின் சிந்தனையாற்றலை மேம்படுத்துவதாகவும் அமைந்திடும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுத்தது பேராக் மாநில இந்து இளைஞர் இயக்கம்.

இளைஞர்கள் என்றாலே செயலாக்கத்திலும் சிந்தனையிலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவர்கள் என்பதை நிரூபித்துள்ளது இவ்வியக்கம்.

'ஒரு மாணவர் ஓர் அகராதி' எனும் ஒரு நடவடிக்கையை பல மாதங்களாக திட்டமிட்டு செயல்படுத்தி, தான் வகுத்த திட்டத்தை நிறைவேற்றியுள்ள பெருமைக்குரியவராக திகழ்கிறார் இவ்வியக்கத்தின் தலைவர் ஆனந்தன் சுப்பிரமணியம்.
ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் உள்ள சொற்களுக்கு  பிற மொழிகள் என்னவென்பதை அறிந்து கொள்ள கஷ்டப்படலாம். இதனால் அவர்கள் பல தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட திட்டமே 'ஒரு  மாணவர் ஓர் அகராதி' திட்டம் ஆகும்.
அதோடு, தமிழ்ப்பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டு வரும் நிலையில் அதனை களைவதற்கான நடவடிக்கையாகவும் இது அமைகின்றது. தோட்டப்புறங்களிலும் உட்புறப்பகுதிகளிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதை தடுக்கும் முயற்சியே இது.
இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பொது இயக்கங்கள் ஆதரவுக்கரமாக இருக்கிறன்றன என்பதை புலப்படுத்தியுள்ளோம்.  மேலும் சில பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளும்  மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் கண்டறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

'ஒரு மாணவர் ஓர் அகராதி' திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டு ஆதரவை தேடியபோது பொது மக்கள் பெருமளவு ஆதரவு வழங்கி ஊக்குவித்தனர். அதன் வாயிலாக பேராக் மாநிலத்தில் 62 தமிழ்ப்பள்ளிகளில் 3,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு 'அகராதி' நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தாப்பா தமிழ்ப்பள்ளியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டு இறுதியாக அக்டோபர் 10ஆம் தேதி குரோ தமிழ்ப்பள்ளியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உறுதுணையாக பொதுமக்கள், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி, பேராக் மஇகா புத்ரா பிரிவுத் தலைவர் ஜி.நெடுஞ்செழியன், இந்து இளைஞர் இயக்கத்தின் தேசியத் தலைவர் சி.அருண்குமார்,  துணைத் தலைவர் அ.ஜெயராமன், தாஜ் கல்லூரி இந்து சமூக இயக்க மாணவர்கள், சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், பள்ளி தலைமையாசிரியர்கள், பொது இயக்கங்கள், பேராக் இந்து இளைஞர் இயக்க செயலவையினர் உட்பட பலருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக  ஆனந்தன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment