Monday 2 October 2017

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – திரையரங்கில் அவசியம் பார்க்க 6 காரணங்கள்!


கோலாலம்பூர் உள்ளூர் இயக்குநர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், ஜெயா கணேசன், மோகன்ராஜ், கே.எஸ்.மணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், ‘என் வீட்டுத் தோட்டத்தில்என்ற மலேசியத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்கில் வெளியீடு கண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையில் தொடங்கிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இன்று வரையில் குறையாமல் இருப்பதற்குக் காரணம் அப்படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் தனித்துவம் தான்.


அச்சிறப்புகளை திரையரங்கில் சென்று பெரிய திரையில், மிரட்டலான சத்தத்துடன் பார்த்து ரசித்தால் தான் உணர முடியும்.
எனவே கீழ்காணும் 6 காரணங்களுக்காக நீங்கள் அவசியம் திரையரங்கில் சென்று இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.
1. பயம்.. ஒரு திரில்லர் படத்திற்குச் சென்று விட்டு வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது அல்லவா? அதேவேளையில் திரில்லர் என்ற பெயரில் வெளி வரும் எல்லா திரைப்படங்களும் இந்த அனுபவத்தைக் கொடுத்து விடுவதில்லை. என் வீட்டுத் தோட்டத்தில்நிச்சயமாக இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் ஒரு திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
 2. கதை ஒரு திரைப்படத்தின் கதையுடன் ஒன்றுவதற்கு அத்திரைப்படம் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையுடன் ஒத்துப் போக வேண்டும். அப்போது தான் அதில் சொல்லப்படும் விசயத்தை ரசித்து உணர முடியும். அந்த வகையில், இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் உலகெங்கிலும் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை முழுமையாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அதிலிருந்து மீண்டும் வருவதற்கு தேவையான ஒன்றையும் இயக்குநர் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

3. நடிப்பு.. மலேசியக் கலைஞர்களின் இசைத் திறமை உலக கவனத்தை ஈர்த்தது போல், நடிப்புத் திறமையும் தற்போது உலகறிந்து வருகின்றது. என் வீட்டுத் தோட்டத்தில்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயா கணேசன், இத்திரைப்படத்தின் மூலம் நிச்சயமாக பல விருதுகளுக்குத் தகுதி பெறுவார். அதுமட்டுமா? சாந்தமும், அன்புமாக வரும் மோகன்ராஜ், மிரட்டலான போலீஸ் அதிகாரிகளாக மகேசன், ஹரிதாஸ், இவர்களோடு அந்த ஓநாய் கதாப்பாத்திரம் ஆகியோரும் நிச்சயம் பேசப்படுவார்கள். ஹவ் டூ யூ ஃபீல் நவ்?” – இந்த வசனம் வரும் காட்சிக்கு கைதட்டல்கள் நிச்சயம்.
4. படத்தின் ஒளிப்பதிவு.. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமரா தொழில்நுட்பம், காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்கள், செட்கள் எனப் பலவற்றையும் பார்த்துப் பார்த்து நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். படத்தில் இடம்பெறும் அந்த வீட்டிற்காக மாதக்கணக்கில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படக்குழுவினரின் கடும் உழைப்பை அதனைப் படம் பார்க்கும் போது உணரலாம்.

5. இசை, பாடல்கள் ஷமேசன் மணிமாறனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்க பலம் சேர்த்திருக்கிறது. 70 விழுக்காடு வசனமே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பின்னணி இசை தான் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்றது. அதுமட்டுமின்றி, அர்த்தமுள்ள இரண்டு பாடல்கள். செவியிலே ஒலி விழா’, ‘என் வீட்டுத் தோட்டத்தில்என்ற இரு பாடல்களும் கதையுடன் தொடர்புடைய வரிகளோடு, அதற்கேற்ற இசையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
6. அனைத்துலக அங்கீகாரம்.. இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்பதற்கு முன்பே, இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் சென்றிடாத 3 அனைத்துலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்று நற்பெயர் வாங்கியிருக்கிறது. இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இத்திரைப்படம் மலேசியக் கலைஞர்களின் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் வெற்றிக்கரமாக வெளியீடு கண்ட இத்திரைப்படத்தை, திரையரங்கில் சென்று சுமார் 2 மணி நேரம் பயத்தை உணர்ந்து, அனுபவித்து, இறுதியில் அதிலிருந்து மீண்டு, மகிழ்ச்சியோடு வீடு திரும்பலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

என் வீட்டுத் தோட்டத்தில்திரைப்படத்தின் புதிய முன்னோட்டத்தைக் கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:


No comments:

Post a Comment