Monday 9 October 2017

இளம் வாக்காளர்களை குறிவைக்கும் எதிர்க்கட்சி; மாய வலையில் விழ வேண்டாம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

தஞ்சோங் மாலிம்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு நம்பிக்கைக் கூட்டணி இளம் வாக்காளர்களை குறி வைத்திருக்கும் நிலையில் வாக்குகளை செலுத்தும் முன்னர் அவர்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

நாட்டின் பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலில் வெற்றிடை தீர்மானிக்கக்கூடிய ஆயுதமாக இளம் வாக்காளர்கள் திகழ்கின்றனர்.
இன்றைய நாட்டின் சூழலில் இளைஞர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, நிலையான வருமானம் என பல்வேறு  சவால்களை அவர்கள் சந்திக்கின்றனர்.
இத்தகைய சவால்களை உள்ளடக்கி ஆளும்கட்சியை குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சியினர் இளைஞர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.

இளம் வாக்காளர்களை திசை  திருப்பி விட்டால் எளிதாக புத்ராஜெயாவை கைப்பற்றி விடலாம் என எதிர்க்கட்சியினர் காணும் கனவு ஒருபோதும் பலிக்காது. ஏனெனில் இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு வித்திட்டவரே எதிரணியில் 'முதன்மை தலைவர்' தான்.
நாட்டை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் தவறான கொள்கைகளால் இந்திய சமுதாயம் சிதறடிக்கப்பட்டதோடு பல்வேறு வாய்ப்புகளை இழந்தோம். அதன் விளைவாக இன்று பின் தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம்.
நமது சமுதாயத்தின் பாதகமான சூழலுக்கு வித்திட்ட துன் மகாதீர் தலைமை வகிக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை இளைஞர்கள் ஆதரிக்கத் தொடங்கினால் இன்னமும் நாம் பின் தங்கி போய்விடுவோம் என மலேசிய மக்கள் சக்தி கட்சி முஹாலில் தொகுதி ஏற்பாட்டில் நடைபெறற பேராக் மாநில மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இன்னமும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளும் சில தலைவர்களால் தான் இளைஞர்களுக்கு அரசியலுக்கு வர தயங்குகின்றனர். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அரசியல் ரீதியில் நமது பலம் வலுபெறும்.

பிற கட்சிகளை போல் இல்லாமல் மலேசிய  மக்கள் சக்தி கட்சியில் 70 விழுக்காட்டினர் இளைஞர்கள் தான். இளைஞர் சக்தியாலேயே மாற்றத்தை விதைக்க முடியும் என்ற நிலையில் ம.ம.ச.கட்சி இளைஞர்களுக்கு தனது கதவுகளை திறந்தே வைத்துள்ளது. 'இன்றைய இளைஞர்கள் இன்றைய தலைவர்கள்' என்ற கோட்பாட்டினை வலியுறுத்தி இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் ஆக்கப்பூர்வ பணியை இக்கட்சி மேற்கொண்டிருக்கிறது.

தங்களது இருக்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ள முதுமை தலைவர்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி கிடக்கும் இளைஞர்கள் இனி அரசியலில் முற்பட முனைய வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் மாபெரும் ஆக்கசக்தியாக உருவெடுக்கும்.

இளம் வாக்காளர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பிரதமட் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் 'விபரீத' ஆசைவார்த்தைகளில் மயங்கிட வேண்டாம் என டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுத்தினார்.
ம.ம.ச.கட்சி முஹாலில் தொகுதித் தலைவர்  எஸ்.கே.ராவ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சரும் தஞ்சோங் மாலில் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஒங் கா சுவான், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மா  ஹங் சூன், சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குஸைரி பின் அப்துல் மாலிக்,  மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகரன்,  தங்சோங் மாலில் ம.ம.ச.கட்சி தொகுதித் தலைவர் சுகுமாறன் உட்பட பிற தொகுதித் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
டத்தின்ஶ்ரீ வாணி உட்பட முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்த  இந்நிகழ்வில் பள்ளிக்கூடம் செல்வதற்கு போக்குவரத்து இன்னலை எதிர்நோக்கும் 5 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அதோடு 1.500க்கும் மேற்பட்டோருக்கு பொட்டலங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ஆடல், பாடல் கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 2,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment