Saturday 24 February 2018

வசந்தபிரியா மரணம்; சிசிடிவி காட்சியின் உள்ளடக்கங்களை காண விரும்புகிறோம்- தந்தை முனியாண்டி


நிபோங் தெபால் -
மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவு செய்யபட்டுள்ள காட்சியின் உள்ளடக்கங்களை அறிய விரும்புவதாக சிறுமியின் தந்தை ஆர்.முனியாண்டி தெரிவித்தார்.

ஆசிரியரின் கைப்பேசியை மாணவி வசந்தபிரியா திருடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதனை மறுத்த முனியாண்டி, எங்கள் மகள் கைப்பேசியை திருடியதாக கூறப்படுவதில் உண்மை இருக்காது. ஏனெனில் அவள் அவ்வாறு செய்யமாட்டாள்.

ஆயினும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் காட்சியை குடும்பத்தினர் காண விரும்புகின்றனர். அதன் உள்ளடக்கத்தை அறிய விரும்புகிறோம் என அவர் கூறினார்.

இதனிடையே, சிறுமி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்துவதற்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்ற அவர், இதன் மூலம் உண்மை வெளிக்கொணரப்படும் என நம்புகிறேன் என்றார்.

வசந்தபிரியாவின் மரணம் வீட்டில்  அனைவரிடத்திலும் கடினமாக சூழலையே உருவாக்கியுள்ளது. அவளை ஒருநாளும் நினைக்காமல் இருப்பதில்லை.

இந்த மரண நீதி விசாரணையின் மூலம் உண்மையிலே என்ன நடந்தது என்பது தெரிய வெளிக்கொணரப்பட வேண்டும் என முனியாண்டி கூறினார்.

மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்பட அட்டெர்ஜி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் விசாரணையை தொடங்குவதற்கான தேதிக்காக காத்திருப்பதாகவும் பினாங்கு போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment