Saturday 10 February 2018

ஃபாலிமில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது 'ஜயண்ட்' பேரங்காடி


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஈப்போ வட்டாரத்தில் 'ஜயண்ட்' பேரங்காடியின் 5ஆவது கிளை நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

ஃபாலிம் பகுதியில் திறக்கப்பட்ட இந்த கிளை நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர், கூட்டுறவு அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் டத்தோ பசாருடின் ஷாடேய், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த நிறுவனத்தின் வர்த்தகம் பேருதவியாக அமையும் என கூறினார்.

2016ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் இவ்வாண்டு இன்னும் கூடுதலாக நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு காணும்.

இதுபோன்ற பேரங்காடிகள்  அமைக்கப்படுவது மக்களின் வாங்கும் சக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 'ஜயண்ட்' பேரங்காடி பேருதவியாக அமைந்துள்ளது என அவர் சொன்னார்.

இதனிடையே, 'ஜெயண்ட்' பேரங்காடியின் தலைமைச் செயல் அதிகாரி பெராரே ஒலிவியர் டெம்பான்க் கூறுகையில், தீபகற்ப மலேசியாவிலேயே மிகப் பெரிய பேரங்காடியாக 'ஜயண்ட் ஃபாலிம்' திகழ்கிறது என கூறினார்.
102,794 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேரங்காடியில் 200 வகையான 23,000 பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த பேரங்காடியில் உள்நாட்டு சிறு, நடுத்தர வணிகங்களை மேம்படுத்தும் வகையில் அமெக்ஸ்மால் நிறுவனத்திற்கும் ஜிசிஎச் ரிடெய்ல் (மலேசியா) சென்.பெர். நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு கையெழுத்து ஒப்பந்தமானது. இந்த ஒப்பந்தத்தில் அமெக்ஸ்மால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தின் டாக்டர் நிக் ஸரினா அஸிம் கையெழுத்திட்டார்.

மேலும், வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 'மை காசே' திட்டத்தின் வழி 50 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 80 வெள்ளி வரையிலான பொருட்களை வழங்குவதற்கு 'ஜயண்ட்' பேரங்காடி முன்வந்தது.

இந்நிகழ்வில் ஈப்போ மாநகர் மன்ற மேயர் டத்தோ ஸம்ரி பின் மான், டெய்ரி ஃபார்ம் இண்டர்நேஷனல் குரூப் சிஇஓ லான் மெக்லியோட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment