Friday 16 February 2018

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு 'மைக்கி' முழு ஆதரவு




கோலாலம்பூர்-
கடந்த 22 ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்தபோது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு எதையுமே செய்யாத  துன் மகாதீர், மீண்டும் பிரதமராக பதவியேற்று என்ன செய்யப் போகிறார் என மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

அவருடைய ஆட்சி காலத்தின்போது இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாக இந்திய சமுதாயம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

தற்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு மானிய ஒதுக்கீடுகள் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் இந்திய சமுதாயம் முன்னேற்றம் காண திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்.

ஆனால், பிரதமராக பதவி வகித்தபோது எத்தகைய திட்டங்களையும் முன்னெடுக்காத முன்னாள் பிரதமர் துன் மகாதீர், தற்போது எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாம் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் இந்திய சமுதாயத்திற்கு பல மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வருவேன் என கூறுவதெல்லாம் 'வெற்று வாக்குறுதி'யாகும்.  அவரால் இந்திய சமுதாயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியாது.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தலைமைத்துவத்தை முழுமையாக ஆதரிக்கும் மைக்கி, வரும் பொதுத் தேர்தலில்  அவருக்கு முழுமையான ஆதரவை புலப்படுத்தும் என அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment