Saturday 10 February 2018
மக்களின் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்பர்? என்ற கேள்விக்கு பதிலாக நான் இருக்க ஆசைபடுகிறேன்; டத்தோ நரான் சிங் - பகுதி 1
நேர்காணல்: ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்
ஈப்போ-
மலேசியாவில் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற 'புந்தோங் தொகுதி'யில் உள்ள இந்தியர்களின் வாழ்வாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே இத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்க நான் ஆசைப்படுகிறேன் என்று புந்தோங் மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் குறிப்பிட்டார்.
50 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற இத்தொகுதியில் உள்ள இந்தியர்களின் வாழ்வாதாரம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றுதான் நான் போராடுகிறேன்.
அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தில் உள்ள இம்மக்களுக்கு யார் வந்து உதவுவர்? என்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருப்பதை விட அந்த கேள்விக்கான 'பதிலாக' நான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே ஒரு வேட்பாளராக களமிறங்க போராடுகிறேன் என்று 'மைபாரதம்' மின்னியல் ஊடகத்துடனான சிறப்பு நேர்காணலின்போது டத்தோ நரான் சிங் கூறினார்.
அவருடனான சிறப்பு நேர்காணல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
கே: ஒரு வழக்கறிஞரான நீங்கள் அரசியலில் நுழைந்ததற்கான காரணம்?
ப: கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் நான், முதலில் மஇகாவில் உறுப்பினராக இணைந்தேன். பினாங்கில் தொடங்கிய இந்த அரசியல் பயணத்தில் முதலில் மருத்துவமனை மருத்துவ உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
பின்னர் 1992ஆம் ஆண்டு ஈப்போ பட்டணத்திற்கு வந்தபோது கம்போங் சிமீ மஇகா தொகுதிக்கு மாற்றினேன். பின்னர் கோலகங்சார், சவுக் தொகுதித் தலைவராக சேவையாற்றினேன்.
2000த்தாம் ஆண்டு வரை மஇகாவில் இருந்த வந்த நான் பின்னர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தபோது எனக்கு பல இன மக்களின் அறிமுகமும் அவர்களுக்கான சேவையும் நீண்டது.
ஆனால் மஇகா இந்தியர்களை சார்ந்த கட்சி என்பதால் பல இன மக்களை சார்ந்திருக்கும் எனக்கு அங்கு சேவையாற்ற முடியவில்லை. பல இன மக்களுக்கான சேவையை துரிதப்படுத்த முயன்றபோது பல இனங்களை உள்ளடக்கிய கட்சி எனக்கு தேவைப்பட்டது.
அதன் அடிப்படையில் கெராக்கான் கட்சி பல இன மக்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் சீன சமூகத்தின் தலைமைத்துவத்தைக் கொண்டதாக திகழ்ந்தது.
அப்போதுதான் பல இன கட்சியாக திகழ்ந்த பிபிபி கட்சியில் 2004ஆம் ஆண்டு இணைந்தேன். இக்கட்சியில் இணைந்தது முதல் பல இன மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறேன். 2008, 2013ஆவது பொதுத் தேர்தல்களில் டான்ஶ்ரீ எம்.கேவியசின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றியதோடு தெலுக் இந்தான் இடைத் தேர்தலிலும் களப்பணி இறங்கினேன்.
அரசியல் நான் ஈடுபட்டுள்ளது இறைவன் எனக்கு கொடுத்த வரம். அனைவராலும் அரசியலில் சாதிக்க முடியாது. ஆனால் அரசியல் என்பது மக்களுக்கான சேவையை முன்னெடுப்பதே ஆகும். அந்த சேவையை அனைவராலும் திறம்பட முன்னெடுக்க முடியாது. எனக்கு அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்திருக்கிறான் என்றால் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தனது பையை நிரப்பிக் கொள்வதும், உறவினர்களுக்கு சலுகைகளை ஏற்படுத்திக் கொள்வது அல்ல. வறிய நிலையில் வாழும் மக்களை கைதூக்கி விடுவதே அரசியல். அதைதான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
கே: வேட்பாளராக களமிறங்க 'புந்தோங் தொகுதி'யை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
ப: 2015ஆம் ஆண்டு முதல் புந்தோங் பகுதியில் சேவையாற்றி வருகிறேன். புந்தோங் தொகுதி மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள இந்த இடம் இன்னமும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்.
அதற்கேற்ப மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் என்னை களப்பணி ஆற்ற சொன்னார். புந்தோங் தொகுதியில் எந்தவொரு தலைவரும் களமிறங்கி மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வராதபோது அந்த 'கடமை'யை நான் கையிலெடுத்தேன்.
புந்தோங் பகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமான புந்தோங் மைபிபிபி கட்சியின் தலைவர் செபஸ்தியனின் துணையோடு இங்கு களமிறங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறேன்.
புந்தோங் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளே அதிகம் உள்ளன. தூய்மையற்ற, சுகாதாரமற்ற நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இங்கு நிலவுகின்றன. இவற்றுக்கான தீர்வு காணப்பட வேண்டியது அவசியாக்கும்.
அதிகமான இந்திய சமூகத்தை உள்ளடக்கிய இங்கு மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. கால்வாய் அடைப்பு, குப்பைக்கூளங்கள் பெருக்கம், பாதுகாப்பற்ற சூழல், போதைபழக்கம், முறையான சாலை வசதி இல்லாதது போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன.
இதுமட்டுமல்லாது, தனித்து வாழும் தாய்மார்கள் வேலை இல்லாமல் அவதியுறுவது, பிள்ளைளுக்கு பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை இல்லாதது, தொழில் புரிபவர்களுக்கு உரிய லைசென்ஸ் இல்லாமை போன்ற பிரச்சினைகளும் நீடிக்கின்றன.
பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தினால் பள்ளிக்கு செல்ல முடியாத அவலநிலையை இங்குள்ள சிறார்கள் எதிர்நோக்கியுள்ளனர். 'கல்வி அனைவருக்கும் அவசியமானது' என்ற நிலையில் அந்த உரிமைகூட மறுக்கப்படும் இச்சிறார்கள் எதிர்காலம் என்னவாகும்?
இவ்வாறான பல அடிப்படை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கும் சூழலில் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ள முடியும்? மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டும்தான் மக்களின் ஆதரவு நமக்கு கிடைக்கும்.
'கச்சான் பூத்தே' என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது புந்தோங் என்பதுதான். இவ்வாறு பிரசித்தி பெற்ற ஒரு பகுதி இன்னும் மேம்பாடு காணாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது முதல் நடவடிக்கையே இத்தொகுதியை மேம்படுத்துவதுதான். இப்பகுதி 'இந்தியர் தொழில் மையமாக' உருவாக்கப்பட வேண்டும். இங்கு தயாரிக்கப்படும் 'கச்சான் பூத்தே' வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு லைசென்ஸ் இல்லாமல் வர்த்தகம் செய்வோருக்கு உரிய லைசென்ஸ் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
மேலும், புந்தோங் பகுதியை 'இந்தியர் கலாச்சார நகரமாக' அறிவிக்கக்கோரி சுற்றுலா அமைச்சிடம் பரிந்துரை வைக்கப்படும். இந்தியர் கலை, கலாச்சாரத்தை சார்ந்துள்ள பெரு நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் இங்குள்ள மக்களின் வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வு காணப்படுதோடு இந்தியர்களி கலாச்சார நகரமாக இது உருவெடுக்கவும் வழிவகுக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் புந்தோங் பகுதி 'இந்தியர் புது கிராமமாக' உருமாற்றப்படும்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்பது? என்ற கேள்வியை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் அந்த கேள்விக்கு பதிலாக இருக்க ஆசைபடுகிறேன். அதுவே நான் வேட்பாளராக களமிறங்க 'புந்தோங்'கை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் ஆகும்.
கே: அரசியல் தற்போது நீங்கள் சந்திக்கும் சவால்கள்?
ப: புந்தோங் பகுதியில் களமிறங்கி சேவையாற்றுவதில் பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை நான் பொருட்டாக கருதுவதில்லை. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து சேவை செய்கிறேன். மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் எதிர்நோக்குவது எல்லாம் பொருளாதார பிரச்சினைதான். சிலரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. ஆனால் நான் தீர்வு காண சொந்த பணத்தை செலவு செய்து வருகிறேன்.
சிலருக்கு அரசியல் தடம் வேறாக இருக்கலாம். என்னுடைய அரசியல் தடம் இதுதான். என்ன செய்ய முடியுமோ அதனை செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த 10 ஆண்டு காலத்தில் மக்கள் இழந்தது அதிகம. இந்த ஒருமுறை மாற்றத்தை மக்கள் நிகழ்த்த வேண்டும். மாற்றம் ஏற்படுத்தினால் மட்டுமே மக்கள் தலைவிதி மாற்றியமைக்கப்படும். எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக மாற்றத்தை முன்னெடுக்க வேண்யது அவசியமாகும்
- நாளை தொடரும்.... -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment