Saturday 24 February 2018

இந்திய சமுதாயத்தை ஏமாற்றுவது எதிர்க்கட்சித் தலைவர்களா? உண்மையை திரித்து கூற வேண்டாம்- அ.சிவநேசன்


புகழேந்தி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்ம் இவ்வேளையில் எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்கள் மீது புழுது வாரி தூற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குற்றஞ்சாட்டினார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை தேசிய முன்னணி அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை ஆட்சி புரிந்து வருகின்றது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட 'அரசியல் சுனாமி' காரணமாகவே சில சிலாங்கூர், பினாங்கு உட்பட சில மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஆட்சி அமைக்க வழிவகுக்கப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்படுகின்றது. எதிர்க்கட்சியினரை சாடுவது மட்டுமல்லாது எதிர்க்கட்சியினரின் செய்திகளையும் புறக்கணிப்பு செய்யும் சூழலில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

துன் மகாதீர், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் பிரதமர், துணைப் பிரதமராக பதவி வகித்தபோது சில ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டபோது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டன.

ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடும் ஊடகம் மீது சட்டநடவடிக்கை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. சட்ட நடவடிக்கை எடுப்பதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் சட்ட நடவடிக்கையை தவிர்க்கிறோம். ஆனால் ஓர் இந்தியர் என்ற முறையில் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.

இந்திய சமுதாயத்தை 60 ஆண்டுகளாக ஆள்வது ஜனநாயக செயல் கட்சி அல்ல (டிஏபி). 18.3.1966இல் பதிவு  செய்யப்பட்ட ஜசெக 2008ஆம் ஆண்டு வரை ஆளும் கட்சியாக மாறியது கிடையாது.

இந்திய சமுதாயத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் போராடியவர்கள் ஜசெக தலைவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட ஊடகம் மறந்து விடக்கூடாது. தமிழரல்லாத ஒருவரை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஜசெகவின் மூத்தத் தலைவர்களான வி.டேவிட், பி.பட்டு ஆகியோர் 'இசா' (ISA) சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இப்போது இருப்பதுபோல் அன்று 100க்கான இந்திய பொது இயக்கங்கள் கிடையாது. இந்தியர்களுக்காகவும் தமிழுக்காகவும் அப்போதே குரல் கொடுத்தவர்கள் ஜசெக இந்தியத் தலைவர்கள் ஆவர்.

நாட்டில் உருவெடுத்துள்ள மதமாற்றப் பிரச்சினைக்கு எதிராக இன்றும் குரல் கொடுப்பது மட்டுமல்லாது சட்ட நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பது ஜசெக இந்தியத் தலைவர்கள் தான்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்டத்தையே இந்நாடும் பின்பற்றியது. பல இன மக்களை கொண்ட இந்நாடு மதசார்பற்ற நாடாக  திகழ்ந்திட வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே துங்கு அப்துல் ரஹ்மான், துங்கு ஓன் ஜபார் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தினர்.

அப்போதெல்லாம் ஷரியா சட்டம் இந்நாட்டில் கிடையாது, ஆனால் அதை ஆளும் தேசிய முன்னணி கொண்டு வரும்போது கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா அதனை எதிர்க்காதது ஏன்?

மதமாற்றப் பிரச்சினையால் திருமதி இந்திரா காந்தி உட்பட பலர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என்பதை மறந்து விட வேண்டாம். திருமதி இந்திரா காந்தி வழக்கறிஞராக இருந்து சட்ட உதவிகளை வழங்கிய எம்.குலசேகரன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

அதுமட்டுமல்லாது, உக்ரேய்ன் பல்கலைக்கழகத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயில்கின்றனர் என தெரிந்தும் அந்த பல்கலைக்கழக சான்றிதழ் அங்கீகரிக்கப்படாது என மலேசிய அரசாங்கம் அறிவித்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள் தான். இவ்விவகாரம் தொடர்பில் உக்ரேய்ன் தூதருடன்  நடத்தப்பட்ட சந்திப்பில் ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், எம்,குலசேகரன் ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். அப்போது மருத்துவ படிப்பின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை, மலேசிய அரசாங்கம்தான் ரத்து செய்தது என்றார். அப்போது ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா இந்த தடைக்கு எதிராக எத்தகைய போராட்டங்களை நடத்தியது?

அதேபோன்று ஆறுமுகம் பிள்ளை பயிற்சி பள்ளியை அரசாங்கம் எடுத்துக் கொண்டபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள்தான்.

இப்படி இந்திய சமுதாயத்தின்  ஒவ்வொரு இன்னல்களுக்கும் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள இந்தியத் தலைவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக பேராக் மாநில
ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment