Thursday 29 June 2017

'பகடிவதைக்கு தேவை புதிய சட்டம்'?


கோலாலம்பூர்-
பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் வேளையில் அக்கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.

5 பேரால் பகடிவதை செய்யப்பட்டு  கடுமையாக தாக்கப்பட்ட 18 வயதான இளைஞர் தி.நவீன் சிசிச்சை பலனின்றி மரணமுற்ற சம்பவம் மலேசியர்கள் மட்டுமின்றி அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

பள்ளிகளில் தொடக்கமாகும் பகடிவதை பள்ளி முடிந்த பின்னரும் தொடர்கதையாகி மரணத்தை விளைவிக்கும் சம்பவமாக உருவெடுப்பது  நவீனின் மரணத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள அத்தாட்சியாகும்.

பள்ளிகளில் ஆரம்பமாகும் பகடிவதை சம்பவங்களை ஆசிரியர்கள் களைய  வேண்டும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக்கு வெளியே நடக்கும் மாணவர்கள் சார்ந்த சம்பவங்களுக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் சில சமயங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தேசிய ஆசிரியர் நிபுணத்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டான் ஹுவாட் ஹோக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என மலாக்கா பெற்றோர் கல்வி நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பகடிவதைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலன் பாதுகாக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டிக்கும்போது அவர்கள் ஆசிரியர்களின் வாகனங்களை எரிப்பது, வீடுகளில் கல் எறிவது, அவர்களின் பிள்ளைகளுக்கு  மிரட்டல் விடுப்பது, தொலைபேசி மிரட்டல் விடுப்பது என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவறிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது.

பிரிட்டன் பள்ளிகளில் இத்தகைய பகடிவதை சம்பவங்களை தடுக்க சட்டம் இருப்பதை போல் மலேசியாவிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஸ்தூரி பட்டு, ராம் கர்ப்பால் சிங், ஸ்டிபன் சிம் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment