Saturday 2 December 2017

எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா

கோ.பத்மஜோதி

சுங்கை சிப்புட்-
எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா அண்மையில் தோட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி ஆண்டு இறுதியில் நடத்தப்படும் இந்நிகழ்வில்  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பரிசளிப்பு விழா மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்துவதோடு அவர்களின் திறனை வெளிபடுத்துவதற்கான தளமாகவும் அமைகின்றது என பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது புறப்பாட நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்வி, புறப்பாட நடவடிக்கைகளே மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற நிலையில் கல்வியில் மட்டும் மாணவர்கள் செலுத்தக்கூடாது.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தாலே மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். அவ்வகையில் மாணவர்களின் நலனுக்காக பாடுபடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பொது இயக்கங்கள், தனிநபர்களின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டுவதாக அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில்  சிறந்த நிலையை அடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக வருகை புரிந்த தொழிலதிபர் யோகேந்திரபாலன், அவரது துணைவியார் திருமதி வர்ஷினி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் நிலைய துணைத் தலைவர் அ.பரமேஸ்வரன்,   பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பாண்டியன், பள்ளி வாரியக்குழு துணைத் தலைவர் கி.மணிமாறன், 80ஆம் ஆண்டு நண்பர்கள் கூட்டுறவு கழக உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர். பள்ளி மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment