Thursday 10 October 2019

தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.44 லட்சம் சிறப்பு மானியத்தை வழங்கியது சிலாங்கூர் அரசு

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசு இன்று சிறப்பு நிதியை வழங்கியது.
மாநிலத்திலுள்ள 94 தமிழ்ப்பள்ளிகளுக்கு 44 லட்சம் வெள்ளி மதிப்புடைய காசோலைகளை மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஆகியோர் வழங்கினர்.

மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக கடந்த பட்ஜெட்டில்  50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த சிறப்பு நிதி நிர்வாக கோளாறின் காரணமாக காலதாமதமாக வழங்கப்படுகிறது என்று கணபதிராவ் தமதுரையில் குறிப்பிட்டார்.
சிறப்பு மானியங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு முடிந்தளவு கூடுதலான நிதியையே வழங்கியுள்ளோம். அரசு மானியத்தை பெறும் பள்ளிகள் அதனை முறையான திட்டமிடலுக்கு செலவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இடமாற்றப் பிரச்சினையை எதிர்நோக்கி தற்போது புத்ரா ஹைட்சில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீபில்ட் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் தளவாடப் பொருட்களை வாங்குவதற்கு பள்ளி மேலாளர் வாரியம் நிதி பிரச்சினையை எதிர்நோக்கியிருப்பதால் அவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் கூறினார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியத்தினர், இந்திய கிராமத் தலைவர்கள் வெகுவாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment