Thursday, 16 April 2020

கோவிட்-19: இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகும் சீனா

பெய்ஜிங்-
சீனாவின், வுஹான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தற்போது 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பல மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்நோயின் இரண்டாவது கோரத் தாண்டவத்திற்கு சீனா தயாராகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த திணறிய சீனா, 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3,000 பேர் இந்நோய் தொற்றுக்கு பலியாகினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என சீனா அறிவித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 89 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று சீனா அறிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று முழுவதுமாக முறியடிக்கப்பட்டது என நிம்மதி பெருமூச்சு விட தொடங்கிய சீனா, தற்போது இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.


கோவிட் -19: பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதன்முறையாக சரிந்தது

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மலேசியாவில் அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக அவ்வெண்ணிக்கை குறைந்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்தது. நேற்று மட்டும் 189 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவ்வெண்னிக்கை 85ஆக குறைந்துள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்நோயால் பாதிக்கபப்பட்டிருந்தவர்கள் 85ஆக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்நோய் தொற்றால் ஒருவர் மரணமுற்றார் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரை இந்நோயால் 5,072 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 83 பேர் மரணமடைந்துள்ளனர். 2,647 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

எம்சிஓ ஜூன் வரை நீட்டிப்பா? இஸ்மாயில் சப்ரி விளக்கம்

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மக்கள் பிடிவாதத்தன்மையுடன் நடந்துக் கொண்டால்  எம்சிஓ காலவரம்பு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ அப்தில் ஹமிட் படோர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, எம்சிஓ காலவரம்பு நீட்டிப்பு சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தே அரசாங்கம் முடிவெடுக்கும் என்று சொன்னார்.

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து - கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான  யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்கள் விகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.

இம்முடிவு மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதோடு, இவ்வாண்டுக்கான எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் அடுத்தாண்டு முதலாம் காலாண்டிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

Friday, 10 April 2020

MCO விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முன்பு போல் இருக்க முடியாது

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முந்தைய காலம் போன்று சுதந்திரமான முறையில் செயல்பட முடியாது என்று பாதுகாப்புத் துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் மக்கள்  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருகிறது. ஆயினும் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.

உதாரணத்திற்கு, பொது கூட்டங்கள், பேரணி போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் சில கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்படலாம் என்றார் அவர்.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் மூலம் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஒத்திவைக்கபடலாம். இது ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்ற அவர், மக்களின் நலனை காக்கும் பொருட்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றர் அவர்.

MCO நீட்டிப்பு: சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது

கோலாலம்பூர்-
தற்போது அமலில் உள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பு செய்வது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது நாளை முடிவு செய்யப்படும்.

ஆயினும் இந்நடவடிக்கை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது சுகாதார அமைச்சின் ஆலோனையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு மக்களின் நலன் கருதி பிரதமர் அறிவிக்கப்போகும் முடிவு என்ன? என்பதே மலேசியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

MCO கண்காணிப்பு: போலீசுடன் ஜேபிஜே இணைந்து செயலாற்றும்

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறும் நடவடிக்கையை குறைப்பதற்கு ஏதுவாக இனி போலீஸ் படையினருடன் இணைந்து சாலை பாதுகாப்பு இலாகாவினர் இணைந்து பணியாற்றுவர் என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 300க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

கட்டுப்பாட்டு ஆணையை மீறும் தரப்பினரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஜேபிஜே இலாகாவினரும் இனி சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.

மார்ச் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட கட்டுப்பபாட்டு ஆணையை 95 விழுக்காட்டினர் மட்டுமே மதித்து வீட்டில் முடங்கியுள்ள நிலையில் ஏனைய 5 விழுக்காட்டினர் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களிடேயே சமூக இடைவெளியை உருவாக்கும் நோக்கில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை  அமல்படுத்தப்பட்டது.

Saturday, 4 April 2020

கோவிட்-19: உலக அளவில் 54 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கோவிட்-19 வைரஸ் காரணமாக உலக அளவில்1,030,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54,229 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 220,003 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். இது இன்றைய இரவு 7.45 மணி வரைக்குமான நிலவரம் ஆகும்.

மலேசியா
* கோவிட்-19 வைரஸ் தொற்றால் மலேசியாவில் மொத்தம் 3,333 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 53 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று வரை 50ஆக இருந்த இவ்வெண்ணிக்கை இன்று 3 பேர் உயிரிழந்ததால் 53ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 217 பேர் இந்நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா
* உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 245,442 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6,098 பேர் மரணமடைந்த நிலையில் 10,411 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலி
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. அங்கு இதுவரை 115,242 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13,915 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் இத்தாலி திகழ்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி திகழ்வதால் அங்கு மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர்
* உலகில் சிறிய நாடாக கருதப்படும் சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

Friday, 3 April 2020

கோவிட்-19: மிக தாமதமாக அனுமதிக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் மரணம்

புத்ராஜெயா-
கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மிக தாமதமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாலே அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை  இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.,
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27, 34 வயதுடைய இளைஞர்கள் மூன்றாவது,நான்காவது கட்ட அபாய நிலையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர்.

மூச்சு விடபெரும் சிரமத்தை எதிர்நோக்கிய அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மிக தாமதமாக வந்த காரணத்தினாலேயே அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19: மரண எண்ணிக்கை 50-ஐ தொட்டது

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ தொட்டது.
சீனா, ஹுவானின் இறைச்சின் சந்தையில் உருவான கோவிட்-19 வைரஸ் தொற்று இன்று 205 நாடுகளில் பரவி 47,000க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர்.

மலேசியாவில் பரவியுள்ள இந்நோய் தொற்றின் காரணமாக இதுவரை 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, 1 April 2020

கோவிட்-19; பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பலியானவரகளின் எண்ணிக்கை 43ஐ எட்டியது.
நாட்டில் பரவியுள்ள வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 146 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை இந்த வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 37ஆக இருந்த நிலையில் இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில் அவ்வெண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 7 பேர் பதவியேற்பு

ஈப்போ-
பேராக் மாநிலத்தில் தேசிய கூட்டணி (பெரிக்காத்தான் நேஷனல்) ஆட்சியமைத்துள்ள நிலையில் 7 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் புதிதாக பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
21 மாதங்கள் நீடித்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து தேசிய கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது. அதன் மந்திரி பெசாராக  அஸுமு பைசால் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பேராக் அம்னோ தலைவர் டத்தோ சரானி முகம்மட் (கோத்தா தம்பான்), டத்தோ டாக்டர் வான் நோராஸிகின் வான் நோர்டின் (கம்போங் காஜா), டத்தோ ஷாருல் ஸமான் யாஹ்யா (ருங்குப்),  பாஸ் கட்சியைச் சேர்ந்த  ரஸ்மான் ஸக்காரியா (குனோங் செமாங்கோல்), முகமட் அக்மால்  கமாருடின் (செலாமா), பெர்சத்து கட்சியைச் சேர்ந்த  டத்தோ நோலி அஸிலின் (துவாலாங் செக்கா), அப்துல் யூனுஸ் ஜமாரி (குவாலா குராவ்) ஆகியோரே பேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

தெங்கு கிளானா உட்பட பல சாலைகள் மூடப்படுகின்றன

கிள்ளான்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிள்ளானிலுள்ள பல சாலைகள் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை மூடப்படவுள்ளன
ஜாலான் தெங்கு கிளானா உட்பட KM 3.5 Jalan Shapadu Lama, KM 3.7 Jalan Shapadu Lama - Rantau Panjang, Jambatan Raja Muda Nala (Jalan Tanjung Syawal), Jambatan Musaeddin (Jalan Batu Tiga Lama) ,  Jalan Paip/ Jalan Bukit Cherakah ஆகியவை மூடப்படவுள்ளன.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வேறு பாதைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூருல்ஹுடா முகமட் சாலே தெரிவித்தார்.