Monday 15 June 2020

அணி தாவினால் பதவியிலிருந்து விலகுக: MIV ஆனந்தன் வலியுறுத்து


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் அணி தாவும் மக்கள் பிரதிநிதிகளின் போக்கு குறித்து மலேசிய இந்தியர் குரல் இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும் சூழலில் தங்களது பதவிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆனந்தன் குறிப்பிட்டார்.

ஏனெனில் மக்கள் அளித்த வாக்கு சம்பந்தப்பட்ட கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவு ஆகும்.

கட்சியிலிருந்து வெளியேறும் ஒருவர் தனது பதவியையும் துறக்க வேண்டும்.  இதுதான் நியதியும் ஆகும்.

அரசாங்கத்தில் தங்களது குரலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இத்தகைய துரோகச் செயலை அரங்கேற்றும் நிலையில் அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

 கட்சி தாவல் நடவடிக்கை மக்களிடையே ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கி விடுகிறது.

அரசியலில் நடத்தப்படும் இது போன்ற சதிராட்டங்களினால் மக்களுக்கான சமூக நலன்கள் பாதிக்கப்படுவதால் அவர்கள் வெறுப்படையும் சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் எதிர்கால அரசியல் சூழல் எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெளிவில்லாத நிலையில் மக்களின் நம்பிக்கையுடன் விளையாட வேண்டாம். மக்களே முதன்மை நீதிபதி எனும் அடிப்படையில் அவர்களால் தண்டிக்கப்படலாம் என்று ஆனந்தன் எச்சரித்தார்.

வீடியோ காண்பதற்கு: Youtube

No comments:

Post a Comment