கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு
ஆதரவாக செயல்பட்டனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மாண்புமிகுகள்
உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி முறையான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணை ஏதுமின்றி 28 நாட்கள் சிறையில் தடுத்து வைக்க சட்டம்
வகை செய்கிறது,
ஆனால் எவ்வித விசாரணையும்
இன்றி சிறையில் தடுத்து வைக்கப்படுவது அவர்கள் தரப்பு நியாயத்தை வெளிகொணர்வதற்கு வாய்ப்பில்லாமல்
போகிறது.
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல்
வாக்குறுதியில் ‘சொஸ்மா’ சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால்
இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த மாண்புமிகுகளே இச்சட்டத்தில் கைது
செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
இதற்கு முன் ஹிண்ட்ராஃப்
போராட்டத்தின்போது 495 நாட்கள் ‘இசா’ சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
அதன் வலியும் வேதனையும் முழுமையாக அறிந்தவன்
நான்.
தங்களது தரப்பு நியாயத்தை
கூட தெரிவிக்க முடியாமல் சொஸ்மாவின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும்
நீதிமன்றத்தில் நிறுத்துக. ஆதாரம் இருந்தால் தண்டனை வழங்குக. அதனை யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லை. அதை விடுத்து மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டம் பாய்ச்சப்படுவது
கொடுமையானது என்று நேற்று புக்கிட் அமான் நுழைவாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தும் ஒன்றுகூடலில்
கலந்து கொண்டபோது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட 12 பேர்
தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment