Monday 10 June 2019

‘மித்ரா’ எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் என்ன? வேதமூர்த்தி விளக்குவாரா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டமான ‘செடிக்’இன் மறு உருவாக்கமான மித்ரா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் என்ன? என்பதை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விவரிப்பாரா? எனும் கேள்வி பலரிடத்தில் எழுந்துள்ளது.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின்போதும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தொடங்கி வைத்த ‘செடிக்’ அமைப்பு பொது அமைப்புகளின் வழி இந்திய சமுதாயத்தைச் சென்றடையக்கூடிய பல திட்டங்களை மேற்கொண்டது.

ஆனால், செடிக் மேற்கொண்ட திட்டங்களில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக கூறி, அதை உருமாற்றும் நடவடிக்கையாகவே ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது.

மித்ராவின் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட  லெட்சுமணன் தனிபட்ட காரணங்களுக்காக அண்மையில் அப்பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
லெட்சுமணனின் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் வேதமூர்த்தி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பின் காரணமாக மித்ரா மிகப் பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மிகப் பெரிய அழுத்தத்திற்கு மித்ரா தள்ளப்பட இந்திய சமுதாயம் வைத்த எதிர்பார்ப்பு என்ன என்பதை வேதமூர்த்தி விவரிப்பாரா?, இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தானே மித்ரா உருமாற்றம் கண்டது. அத்தகைய சூழலில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு ‘மித்ரா’  அழுத்தத்திற்கு ஆளாக்கும் நிலை ஏற்பட என்ன நடந்தது?
டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் தலைமை இயக்குனராக ‘செடிக்’இல் பதவி வகித்தபோது வராத அழுத்தம் மித்ராவுக்கு ஏற்பட காரணம் என்ன?

மித்ராவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓர் அபாயகரமான சூழலுக்கு இந்திய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளதா? அல்லது இந்திய சமுதாயத்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திறமையும் செயலாக்காமும் ‘மித்ரா’வுக்கு போதவில்லையா? என்பதை  அமைச்சர் வேதமூர்த்தி இந்திய சமுதாயத்திடம் விவரிக்க முற்படுவாரா?

No comments:

Post a Comment