Friday 21 June 2019

புதிய மலேசியர்களை உருவாக்குவோம்- டத்தோஶ்ரீ ஏண்டி வேண்டுகோள்

கோலாலம்பூர்-
'புதிய மலேசியா' மலர்ந்துள்ள மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அதேவேளையில், 'புதிய மலேசியர்'களை உருவாக்கும் பயணத்திற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என 'எவரெஸ்ட்' குழுமத்தின் தோற்றுநரும் தலைமை நிர்வாகியுமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். ஏண்டி வேண்டுகோள் விடுத்தார்.

மறுமலர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் உன்னதம் அறிந்துதான் பேசுகிறோமா எனத் தெரியவில்லை. தேசிய அரசியல் நீரோட்டத்தின் சரித்திரத்தில் தற்போது மிகப் பெரிய  மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தைப் பயன்படுத்தி இந்திய சமுதாயம் மேன்மேலும் வளர்ச்சிக் காண வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தையும் உள்ளடக்கியதுதான். இதற்கு நாம் எத்தகைய  முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம் என்ற இமாலய கேள்விகள் பல எழுகின்றன என்பதை மறுப்பவர் இலர் என்றார் அவர்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் 'வணிகப் பகிர்வாடல் வலையம் (பிஎஸ்என் - Business Sharing Network) எனப்படும் புலனக் குழுவைத் தோற்றுவித்து, அக்குழுவில் முழுக்க முழுக்க தொழில்முனைவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே காணப்படும் சமுதாய அக்கறையும் விடாமுயற்சியும் கண்டிப்பாக 'புதிய மலேசியர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை டத்தோஶ்ரீ ஏண்டி பகிர்ந்து கொண்டார்.

பிஎஸ்என் புலனக் குழு கடந்த 2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் ஏறக்குறைய 134 தொழில்முனைவர்களைக் கொண்டு சமூக வலைத்தள தொழில்முனைவர் இரவுடன் முதலாவது ஆண்டுக் கூட்டத்தையும் நடத்தினோம்.

அதன்பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு 375 தொழில்முனைவர்களைக் கொண்டு 'மஜெஸ்திக்' ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் மற்றுமொரு பிரமாண்டமான விழா நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்முனைவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

அதுமட்டுமின்றி, வரும் செப்டம்பர் மாதம் அதே மஜெஸ்திக் தங்கும் விடுதில் 1,500 தொழில்முனைவர்களை உட்படுத்தி மேலும் ஒரு சாதனை விழா நடைபெறவுள்ளது என்பதையும் டத்தோஶ்ரீ ஏண்டி கூறினார். 
காலம் அதன் பயணத்திற்கேற்ப மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனை நாம் நினைவில் கொள்ள தவறிவிடுகின்றோம் என்பதுதான் நிதர்சன உண்மை. சவால்கள் நிறைந்த இப்பயணத்தில் நாமும் கைகோர்த்துப் பயணிக்க 'பொருளாதார பலம்' மிக முக்கியம் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் இப்புலனக் குழு தொடங்கப்பட்டது.

நம்மிடையே வணிக ரீதியிலான பகிர்வும் ஒற்றுமையும் காணப்படவில்லையே என்ற கோபத்தில்கூட இக்குழு உருவான என்றும் சொல்லலாம். இந்நாட்டில் பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள சீன சமூகம் கடைபிடிக்கும் ஒற்றுமையும் தகவல் பகிர்வும்தாம் அவர்களை இந்நிலைக்குக் கொண்டு செல்லது.

நாமும் அதனைக் கடைபிடித்து பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பிஎஸ்என் வணிக வலையத்துடன் இணைந்துள்ளவர்களை ஒரே குடையின் கொண்டு வர வேண்டும் என்ற பயணத்தில் வெற்றியும் பெற்றுள்ளோம் என்ற அவர், இவ்வெற்றியானது 'பிஎஸ்என்' புலனக் குழுவில் இணைந்து பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரும் அனைவருக்கும் சமர்ப்பணம் என்றார்.

பிஎஸ்என் புலனக்குழுவில் முஸ்லிம் அன்பர்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் மதிக்கும் வகையில் அவர்களுடன் நோன்புத் துறக்கும் நிகழ்ச்சியொன்று அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ ஏண்டி இவ்வாறு கூறினார்.

சமுதாயத்தை அரசியல் மட்டுமே வழிநடத்திக் கொண்டிருந்த காலகட்டம் மாறி, தற்போது சமூக வலைத்தளங்களைச் சார்ந்த சில குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றன. நாமும் அதற்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை 'பிஎஸ்என்' புலனக் குழு நிரூபித்து வருகின்றது. முதல் குழு, இரண்டாவது குழு என கட்டம் கட்டமாக வளர்ச்சி கண்டுவரும் இக்குழு, சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தொழில்முனைவர் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய இலக்காகும். இது வெறும் வார்த்தைக்காக மட்டுமே சொல்லப்படுவதில்லை. கண்டிப்பாக நிகழ்த்தியும் காட்டுவோம் எனவும் டத்தோஶ்ரீ ஏண்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment