Monday 31 December 2018

ஆஸ்ட்ரோ வானவிலில் “இரயில் பயணங்கள்” புத்தம் புதிய டெலி மூவி


கோலாலம்பூர்- 

‘கீதையின் ராதை’, ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படங்களின் இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் எழுதி இயக்கி நடித்துள்ள “இரயில் பயணங்கள்” புத்தம் புதிய டெலி மூவி அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் ஒளியேறவுள்ளது.


கதைச் சுருக்கம்
இயன்முறை மருத்துவரான (Physiotherapist) சுவேதா, குடும்ப சூழ்நிலையால் தன்னுடைய தந்தையின் வியாபாரத்தை ஏற்றிக் கொண்டு ஒரு வாட்ச் மெக்கானிக்காக இக்கதையில் வலம் வருகின்றார். பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய கடைக்கு ஒவ்வொரு நாளும் சுவேதா இரயிலில் பயணம் செய்கிறார்.

தன்னுடைய மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடும் சுவேதாவின் அம்மா ஒரு புறம், தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப் போகும் ஆண் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களுக்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும் என சுவேதா ஒருபுறம் என்று கதை நகர்கின்றது. 

இரயில் பயணத்தின் போது சுவேதா விஜயைச் சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பு முதலில் நட்பில் தொடங்கி, பிறகு காதலாக மாறுகின்றது. நாட்கள் நகர எதிர்பார்க்காத சம்பவங்கள் இக்கதையில் நடக்கின்றது. இறுதியில், சுவேதா மற்றும் விஜய் ஒன்று சேர்கின்றார்களா அல்லது தன்னுடைய தாயார் பார்க்கும் மணமகனைச் சுவேதா திருமணம் செய்து கொள்கிறாரா? என்பதுதான் கதையாகும்.

கதாப்பாத்திரங்கள்
இந்த டெலி மூவி விழுதுகள் அறிவிப்பாளரும் நடிகருமான கபில் கணேசன், யவனேஸ் ரோபாட், கார்த்திக், அம்மு திருஞானம், ஃபீனிக்ஸ்தாசன், குணசேகரன் கருப்பையா, கலைச்செல்வி, சுசீலா தேவி எனப் பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நம் உள்ளூர் இசையமைப்பாளர் ஜெய் ராகவேந்திரா இசையில் இந்த டெலிமூவியில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை இளம் பாடகர் தண்ணீர் நாராயணன் பாடியுள்ளார். அதே வேளையில், இந்த டெலி மூவியை சதீஸ் நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“இரயில் பயணங்கள்” குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் முகநூல் அல்லது www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

No comments:

Post a Comment