Sunday, 9 December 2018

2,000 ஏக்கர் நிலத்தில் வருமானம் ஈட்ட ஈராண்டுகள் ஆகலாம்- டத்தோ சகாதேவன்

கோ.பத்மஜோதி

ஈப்போ-
பேரா மாநில தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள செம்பனை மரங்களின் மூலம் பெறப்படும் நிதி பள்ளிக்கு செலவிட இன்னும் ஈராண்டுகள் ஆகலாம் என்று பேரா மாநில இந்தியர் கல்வி அறவாரியத்தின் வாரியக்குழு உறுப்பினர் டத்தோ ப.சகாதேவன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் இங்கு செம்பனை மரங்கள் நடப்பட்ட நிலையில் தற்போது மூன்றாண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. செம்பனை மரங்கள் நல்ல விளைச்சலை கொடுத்து அதன் மூலம் லாபம் ஈட்ட ஐந்தாண்டு காலம் பிடிக்கும் என்பதால் இன்னும் ஈராண்டுகள் நாம் பொறுத்திருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் கிடைக்கப் பெறும் வருமானம் மூலம்  தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் நாம் செலவிட முடியும். அதன் பின்னர் 20-25 ஆண்டுகளுக்கு இம்மரங்களின் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

இந்த 2,000 ஏக்கர் நிலத்தில் 1,700 ஏக்கரில் செம்பனை மரங்களை நடவு செய்து
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் பராமரித்து வருகிறது என்று அதன் தலைமை நிர்வாகியுமான டத்தோ சகாதேவன் கூறினார்.

சர்ச்சைகள் வேதனையளிக்கிறது

இந்த நில விவகாரம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருவது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதன் மூலம் பெரிய பாதிப்புகள் எதனையும் நாம் எதிர்கொள்ளவில்லை.

ஏனெனில் இவ்விவகாரம் தொடர்பில் வாரியக்குழுவில் கலந்து பேசுவதோடு ஆண்டுக்கூட்டத்தில் பேராளர்களுக்கு முறையான விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதனால் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தில் இதுவரை எவ்வித பிரச்சினைகளும் நிலவவில்லை என்றாலும் சர்ச்சைகள் பெரும் வேதனை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment