Friday 7 December 2018

2,000 ஏக்கர் நிலத்தில் தில்லு முல்லுகளா? ஆதாரம் இல்லாமல் பேசாதீர் - வாரியக்குழு சாடல்

ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நில விவகாரத்தில் எவ்வித தில்லு முல்லும் நடைபெறவில்லை; ஆதாரம் இல்லாமல் குறை கூற வேண்டாம் என்று பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் அறிவித்துள்ளது.

செம்பனை மரங்களை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தின் மூலம் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் செலவிடுவதற்கு இந்நிலம் ஒதுக்கப்பட்டு அதை இவ்வாரியம் பராமரிக்கிறது.
இந்த 2,000 ஏக்கர் நிலத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் செம்பனை மரங்களை நடவு செய்துள்ளது. இந்நிலத்தை செப்பனிட்டு மரங்களை நடவு செய்வதற்கான செலவுத் தொகையாக 15 மில்லியன் வெள்ளியை   கூட்டுறவு சங்கத்தின்  துணை நிறுவனமான NALFIN Realties Sdn.Bhd. வழங்கியுள்ளது என்று அவ்வாரியத்தின் தலைவர் முனியாண்டி தெரிவித்தார்.

இந்த வாரியத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் கூட்டுறவு சங்கத்தினரும் எவ்வித வருமானமும் பெறாமல் சொந்த செலவிலேயே சமூகச் சேவையின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில் இவ்வாரியத்தில் தில்லு முல்லு நடப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் சட்டமன்றக் கூட்டத்தில் பேசியிருப்பதோடும் தில்லு முல்லு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது வேதனையளிக்கிறது.

சிவசுப்பிரமணியம் உண்மையில் அக்கறை கொண்டவரா?

2,000 ஏக்கர் நில விவகாரத்தில் சிவசுப்பிரமணியம் உண்மையில் அக்கறை கொண்டவரா? என்ற கேள்வி எழுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றிய பின்னர் அதன் ஆட்சிக்குழு உறுப்பினராக சிவநேசன் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வாரியக்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.

இந்த சந்திப்பு குறித்து சிவநேசன் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் தெரான்ஸ் நாயுடு, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோரை அழைத்திருந்தார்.

ஆனால் இந்த சந்திப்பில் தெரான்ஸ் நாயுடு கலந்து கொண்டபோது சிவசுப்பிரமணியம் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை?, எங்களது விளக்கங்களை ஏன் நேரடியாக பெற்றுக் கொள்ள முனையவில்லை?

இந்த 2,000 ஏக்கர் நில விவகாரம் தொடர்பில் முழுமையான விளக்கங்களையும் ஆவணங்களையும் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனிடம் வழங்கி விட்டோம்.

உங்களுக்கு (சிவசுப்பிரமணியம்) ஏதாவது விளக்கம் வேண்டுமானால் சிவநேசனிடம் நேரடியாக பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் ஒரே கட்சியில் ஒரே பக்காத்தான் கூட்டணியில் தானே இடம்பெற்றுள்ளீர்கள். உண்மையை கேட்டு தெரிந்து  கொள்வதில் என்ன தயக்கம்? என்று முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த  வாரியத்தில் எவ்வித தில்லு முல்லுகளையும் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இது தொடர்பில் சட்டமன்றத்தில் பேசிய சிவசுப்பிரமணியத்திற்கு வெளியில் பொதுநிலையில் பேச துணிச்சல் உண்டா? அவ்வாறு அவர் பேசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வாரியக்குழு உறுப்பினர்கள் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ ப.சகாதேவன், டத்தோ மாரிமுத்து, நாச்சிமுத்து, சட்ட ஆலோசகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment