Friday 14 December 2018

'இசா'வில் ஹிண்ட்ராஃப் தலைவர்கள் கைது- 11 ஆண்டுகளை கடந்த வரலாற்று அத்தியாயம்

ரா.தங்கமணி

டிசம்பர் 13, 2007.... மலேசிய இந்தியர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு கறுப்பு அத்தியமாக அமைந்த நாள். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மலேசிய வரலாற்றில் காணப்படாத உரிமை போராட்டமாக அமைந்த  'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை வழிநடத்திய ஐந்து தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கைது செய்யப்பட்ட  நாள் இன்று.

கூலித் தொழிலாளியாக மலையகத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தத் தவறிய பிரிட்டன் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பதாக அமைந்த ஹிண்ட்ராஃப் பேரணி, மலேசியத் தொழிலாளர்களின் உரிமை போராட்டக் குரலாக எதிரொலித்தது.

நவம்பர் 25, 2007ஆம் தேதி கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் திரண்ட லட்சக்கணக்கான இந்தியர்களின் ஹிண்ட்ராஃப் போராட்டத்தை கலைப்பதற்காக அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இந்தியர்களை கோபப்படுத்தியது.

போலீசாரின் கைது நடவடிக்கை, தடியடி, கலகத் தடுப்பு போலீசாரின் தண்ணீர் பாய்ச்சல், புகை குண்டு வீச்சு போன்றவற்றால் இந்தியர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக ஆளும் அரசாங்கத்தின் மீது இந்திய சமுதாயம் அதிருப்தி கொள்ளும் வகையில் அமைந்திருந்தது ஹிண்ட்ராஃப் தலைவர்கள் ஐந்து பேர் மீதான கைது நடவடிக்கை.

இசா சட்டத்தின் கீழ் அதன் தலைவர்களான பொன்.உதயகுமார், வீ.கணபதிராவ், மனோகரன் மலையாளம், வசந்தகுமார், கங்காதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இசா சட்ட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 தலைவர்களும் தைப்பிங், கமுண்டிங் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் (495 நாட்கள்) தடுத்து வைக்கப்பட்டனர்.

அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறலாக பார்க்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை இந்தியர்கள் மத்தியின் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியது மட்டுமின்றின் ஐந்து தலைவர்களையும் 'சமுதாய போராளியாக'வும் உருமாற்றியது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணி ஆட்சியை இழப்பதற்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஹிண்ட்ராஃப் போராட்டம், 5 தலைவர்களின் கைது நடவடிக்கை. மலேசிய இந்தியர்களின் அவலநிலையை உலகளவில் பரவச் செய்த ஹிண்ட்ராஃப் தலைவர்களின் தியாகத்தை மலேசிய இந்தியர்கள் எளிதில் மறந்து விடக்கூடாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது திணிக்கப்பட்ட 'ஓப்ஸ் லாலாங்' கைது நடவடிக்கைக்குப் பின்னர் மற்றோர் அதிர்ச்சிகரமான கைது நடவடிக்கையாக அமைந்த ஹிணட்ராஃப் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை 11 ஆண்டுகளை கடந்த பின்னரும்  இன்னமும் மலேசிய இந்தியர்களின் மனதில் மாறாத வடுவாக அமைந்துள்ளது

'ஒரு சமூகத்தின் உரிமைப் போராட்ட குரல் வளையை நெறிக்க முயன்றால் தலைமைத்துவத்தையே மாற்றியமைப்போம்' என்ற அத்தியாயத்தை படைத்த  இந்திய சமுதாயத்தின் வழிகாட்டி முன்னோடிகளான  ஹிணட்ராஃப் தலைவர்களின்  தியாகம் மலேசிய அரசியலில் ஒரு வரலாற்று பெட்டகம் ஆகும். அதனை எந்நாளும் போற்றுவோம்... காப்போம்... அடுத்தத் தலைமுறைக்கும் இந்த தியாகத்தை கொண்டுச் சேர்ப்போம்.

No comments:

Post a Comment