Monday 3 December 2018
ஹிண்ட்ராஃப் போராட்டம்; உரிமைகளை நாம் இன்னும் முழுமையாக அடைந்திடவில்லை - கணபதிராவ்
ரா.தங்கமணி
(குறிப்பு: யுஎஸ்ஜே 25, சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக யார் மீதும் எவ்வித வெறுப்புணர்வும் தூண்டப்படக்கூடாது எனும் நோக்கில் இப்பதிவு தாமதமாக பதிவேற்றப்படுகிறது. நன்றி)
கோலாலம்பூர்-
மலேசிய இந்தியர்களின் எழுச்சி பேரணியான 'ஹிண்ட்ராஃப்' பேரணி வலியுறுத்திய இந்தியர்களுக்கான முழுமையான உரிமை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.
இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு தருவிக்கப்பட்ட இந்தியர்களால் காடாக கிடந்த இந்நாடு செல்வம் கொழிக்கும் மேம்பாடு அடைந்த நாடாக உருமாறியது. அத்தகையோரின் வம்சாவளியினரான இங்குள்ள மலேசிய இந்தியர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகள் முழுமையாக கிடைக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்டஎழுச்சி பேரணியே நாட்டின் இன்றைய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ஆளும் அரசாங்கத்தால் உரிமைகள் இழந்து சலுகைகள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்படும் சமூகமாக இந்திய சமுதாயம் உருமாற்றப்படுவதற்கு எதிராக இந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களில் எழுச்சிக் குரலாக 2007 நவம்பர் 25 கோலாலம்பூர் மையப்பகுதியில் எதிரொலித்தது.
அன்று இந்தியர்கள் ஏற்படுத்திய 'அரசியல் புரட்சியே' இன்று 61 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நம்பிக்கைக் கூட்டணியை (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளது.
ஹிண்ட்ராஃப் உரிமை குரல் பேரணி நடந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்திய சமுதாயம் முழுமையாக உரிமைகளை அடைந்து விட்டதா? என்ற கேள்விக்கு 'இன்னும் இல்லை' என்பதே உண்மையாகும்.
ஹின்ட்ராஃப் போராட்டத்தின் எதிரொலியாக ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு கடந்த தேசிய முன்னணி ஆட்சியையே கதிகலங்கச் செய்தது. அதன் மூலமே கண்டு கொள்ளப்படாத இந்திய சமுதாயத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வைத்தது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் மானியம், ஆலயங்களுக்கு நிதி, இந்திய தொழில் முனைவர்களுக்கு கடனுதவி, இந்திய சமுதாயத்திற்கான சிறப்புப் பிரிவு, குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு போன்ற பல நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்திய சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட 'ஹின்ட்ராஃப்' பேரணி ஓர் அடித்தளமாக அமைந்தது. அந்த அடித்தளம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டு ஓர் இந்திய அமைச்சர் மட்டுமே பதவி வகித்த மலேசிய அமைச்சரவையில் இன்று 4 முழு அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சர் பதவியும் வகிக்க வகை செய்துள்ளது.
இன்று பல மாநிலங்களில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி புரிவதும் அங்கு இந்திய சமுதாயத்திற்கு பதவிகள் வழங்கப்படுவது 'ஹிண்ட்ராஃப்' ஏற்படுத்திய புரட்சியே.
'ஹிண்ட்ராஃப்' என்பது ஒரு தனிமனித சொத்தாக கருத முடியாது. அது ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் குரலாகவே கருதப்படும்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்தினால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும் இந்திய சமுதாயத்திற்கான புரட்சியாக இப்பேரணி அமைந்திருந்தை எண்ணி பார்க்கும்போது பெருமையாக உள்ளது என்று அதன் இப்போராட்டத்திற்கு தலைமையேற்ற குழுவில் ஒருவரான கணபதிராவ் கூறினார்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்குப் பின்னர் மலேசிய இந்தியர்களுக்கான எழுச்சிக் குரல் அடங்கி விடக்கூடாது எனும் எண்ணத்தில் 'மலேசிய இந்தியர் குரல்' அமைப்பு தொடங்கப்பட்டு அதன் மூலம் பல சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
11 ஆன்டுகள் அல்ல; எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஹிண்ட்ராஃப் வரலாறு யாராலும் அழிக்கப்படாது. இந்தியர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கப் பெறுவதில் எவ்வித பின்வாங்கலும் காட்டப்படாது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment