Monday 14 January 2019

செமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர்- கணபதிராவ் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் உரிமைக்காக போராடுகிறோம் என்ற கூறுகின்றவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

1.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைந்திருந்த இப்பள்ளிக்கு 3.8 ஏக்கர் நிலத்தை பெற்று கொடுத்தவன் நான். இப்பள்ளி அமைந்துள்ள நிலம் சைம் டார்பி மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்ப்பள்ளி, ஆலயம், தேவாலயம், தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான நிலம் ஆகியவை ஒதுக்கப்பட்டது.

செமினி தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி வாரியக்குழு கோரிக்கை விடுத்தது. ஆயினும் 3.8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.  சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை வரவேற்கக்கூடியதுதான்.

ஆனால் நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் 6 ஏக்கர் நிலத்தில்தான் அமைந்துள்ளன என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. நில விவகாரம் தொடர்பில் பள்ளி வாரியக்குழுவினர் தொடர்ந்த வழக்கிலும் தோல்வி கன்டுள்ளனர்.

ஏற்கெனவே நில ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் தமிழ்ப்பள்ளிக்காக நில ஒதுக்கீடு செய்ய முற்பட்டால் அது ஆலயம், தேவாலயம் அல்லது தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு நிலத்தை வெகுவாக பாதிக்கும்.

முந்தைய காலங்களில் மாநில அரசாங்கம் பக்காத்தான் கூட்டணி வசம் இருந்த போதிலும் மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசமே இருந்தது.
அப்போதெல்லாம் இப்பள்ளி விவகாரம் தொடர்பில் போராட்டம் நடத்தாதவர்கள் இப்போது தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக உரிமை போராட்டம் என்ற பெயரில் அரசியல் சர்ச்சையை உருவாக்க முற்படுகின்றனர்.

வரும் செவ்வாய்க்கிழமை சைம் டார்பி மேம்பாட்டு நிறுவன தரப்பினருடன் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இச்சந்திப்பின் மூலம் தீர்க்கமான முடிவு காணப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது. எத்தகைய வழியில் சுமூகமான தீர்வு காணப்பட முடியும் என்பது கலந்தாலோசிக்கப்படும் என்று பத்துமலையில் நடைபெற்ற தமிழன் உதவும் கரங்கள் நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment