Tuesday 1 January 2019

2018: உலகையே திரும்பி பார்க்க வைத்த மலேசிய தேர்தல் களம்

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் மலேசியர்களுக்கு இவ்வாண்டு அதிர்ச்சி கலந்த சம்பவங்களை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக, மலேசிய அரசியல் சூழல் நாட்டு மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அதன் தாக்கம் உலக அரங்கையும் அதிர வைத்தது.

1. மே 9இல் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 60 ஆண்டுகால தேசிய முன்னணி முதன் முறையாக ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

2. எதிர்க்கட்சிகளாக பிளவுபட்டு கிடந்த ஜசெக (DAP), பிகேஆர் (PRK), அமானா (AMANAH), பெர்சத்து (BERSATU) ஆகியவை ஒன்றிணைந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியது.

3. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முனைந்த போதிலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காத்தால் பிகேஆர் கட்சியின் சின்னத்தின் போட்டியிட நான்கு கட்சிகளும் முன்வந்தன. இதில் தனது 'ராக்கெட்' சின்னத்தையும் விட்டுக் கொடுத்து பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட ஜசெக முனைந்தது அன்று பலரது புருவத்தையும் உயரச் செய்தது.

4. மத்திய அரசாங்கத்தை மட்டுமல்லாது சிலாங்கூர், பினாங்கு, கெடா, பேரா, நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சி அமைத்தது.

5. 60 ஆன்டுகால ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த தேசிய முன்னணி எதிர்க்கட்சியாக மாறியதோடு பகாங், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தியது.

6. தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் 22 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் முகம்மதுவே பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியிலும் பிரதமராக பதவியேற்றது வரலாற்றுப் பூர்வ சம்பவமாகும்.

7. 13 உறுப்புக் கட்சிகளுடன் 'கெத்தாக' இருந்த தேசிய முன்னணி கூட்டணி 14ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் அக்கூட்டணியை விட்டு பல கட்சிகளில் விலகிச் சென்றன. இன்று அம்னோ, மசீச, மஇகா ஆகிய 3 கட்சிகளை மட்டுமே கொண்டுள்ளது தேமு.

8. நாட்டை இதுவரை 7 பிரதமர்கள் ஆட்சி புரிந்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அவரது துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.  ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் பிரதமராக டத்தோஶ்ரீ நஜிப் திகழ்கிறார்.

9. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இதுவரை 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றுள்ளது.

10. நாட்டின் 8ஆவது பிரதமர் என வர்ணிக்கப்படும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அரசியல் பயணத்தை தொடர்வதற்கு ஏதுவாக போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்துள்ள டத்தோஶ்ரீ அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்காகவே இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

11. 14ஆவது பொதுத் தேர்தலின்போது  கையூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜின் மீதான வழக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அந்த வெற்றி செல்லாது என தேர்தல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படாததால் கேமரன் மலை தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment