Friday 7 July 2017

டாக்டர் ஜெயகுமாரின் வழக்கை எதிர்கொள்ள தயார் - அ.சிவநேசன்


ஈப்போ-
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் .சிவநேசன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயகுமார் ஆண்டுதோறும் தனது சொத்து விவரங்களை பொதுவில் அறிவிக்கிறார். அதேபோன்று இவ்வாண்டு மே மாதமும் தன்னுடைய சொத்து விவரங்களை பொதுவில் அறிவித்தார்.

மக்கள் பிரதிநிதியான டாக்டர் ஜெயகுமார்  அறிவித்த சொத்து விவரங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை கேள்வி கேட்கும் உரிமை இந்நாட்டின் குடிமகனான எனக்கு முழுமையாக உள்ளது.

அவருடைய சொத்து அறிவிப்பு முழுமையாக இல்லை என்று மட்டுமே தமிழ் நாளிதழில் அறிக்கை விடுத்தேனே தவிர, அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என ஒருபோதும் கூறவில்லை.

தன் மீது அவதூறு சுமத்தும் வகையில் தான்  அறிவித்த சொத்து விவரங்கள் முழுமையாக இல்லை என நாளிதழில் அறிக்கை விடுத்த சிவநேசன், தான் கூறியதை திரும்ப பெற வேண்டும் எனவும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் டாக்டர் ஜெயகுமார் கூறியிருந்தார்.

ஆனால் சிவநேசன் தனது அறிக்கையை திரும்ப பெறாததோடு மன்னிப்பு கேட்காததால் நேற்று இங்கு ஈப்போ உயர்நீதிமன்றத்தில் சிவநேசன் மீது டாக்டர் ஜெயகுமார் வழக்கு பதிவு செய்தார்.

இது குறித்து மேலும் கூறிய சிவநேசன், இவ்விவகாரம் தொடர்பில் சமாதானம் பேச பேராக் மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங், துணைத் தலைவர் வீ.சிவகுமார் உட்பட அந்தோணி லோக், ஙே கூ ஹாம் போன்றோரிடம்  சமாதானம் காண கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட என்னிடம் ஒரு முறை கூட தொடர்பு கொண்டதில்லை. அவரும் மக்கள் பிரதிநிதி, நானும் மக்கள் பிரதிநிதி, அவரும் நிபுணத்துவம் வாய்ந்தவர், நானும்  நிபுணத்துவம் வாய்ந்தவன், நானும் அவரும் ஒரே எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள். அவ்வாறு இருக்கும்போது என்னிடம் நேரடியாக சமாதானத்திற்கு அழைத்திருக்கலாமே?

டாக்டர் ஜெயகுமார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை நான் வரவேற்கிறேன். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது பல கேள்விகளை முன் வைக்க முடியும். ஆதலால் டாக்டர் ஜெயகுமார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என சிவநேசன் கருத்துரைத்தார்.

No comments:

Post a Comment