Sunday 29 March 2020

எம்சிஓ- இன்னும் வலுபடுத்தப்படலாம்- தற்காப்பு அமைச்சர்

புத்ராஜெயா-
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு தடை ஆணையை (எம்சிஓ) இன்னும் வலுபடுத்தும் ஆலோசனையை தேசிய பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்துள்ளது.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல தொழிற்சாலைகள், கடைகள் மூடப்படலாம் அல்லது அதன் நடவடிக்கை நேரத்தை குறைப்பதும் இந்த ஆலோசனையில் அடங்கும்.

கோவிட்- 19 செயல் நடவடிக்கைக் குழுவுடனான கூட்டத்திற்குப் பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் இம்முடிவு அறிவிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சுடன் விவாதிக்கப்படும்.

உணவுப் பொருள் வேண்டுமென்றால் காய்கறிகள் பயிரிடப்பட வேண்டும், காய்கறிகள் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு உரக்கடைகள், பூச்சிக்கொல்லி மருந்து கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம் தற்போது மூடப்பட்டுள்ளன.

மக்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் கட்டுப்பாட்டு ஆணையை வலுவாக்குவது தொடர்பில்  முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க கடந்த 18ஆம் தேதி முதல் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு தடை ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

No comments:

Post a Comment