Wednesday 11 March 2020

குறைகளை சொல்லிக் கொண்டிருக்காமல் செயல்பட வாய்ப்பளிப்போம்- மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்  தலைமையிலான அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது அன்றைய மஇகாவின் தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் முழு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் பல தலைவர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் பதவி வகித்து வந்த நிலையில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இடம்பெற்றிருந்த தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

21 மாத கால ஆட்சியில் அங்கம் வகித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் பிளவுபட்டதன் விளைவாக புதிதாக தொடங்கப்பட்ட தேசிய கூட்டணியில் தேசிய  முன்னணி, பாஸ், பெர்சத்து போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் டத்தோஶ்ரீ சரவணன் மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இந்த புதிய அமைச்சரவையில் ஒரு முழு அமைச்சர், ஒரு துணை அமைச்சர் பதவி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ம இகாவை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தின் பலனாக பெரும்பாலான ம இகா வேட்பாளர்கள் தோல்வி தழுவினர். அதில் தப்பித்தது சரவணனும்  டத்தோ எஸ்.சிவராஜ் மட்டுமே. பின்னர் கேமரன் மலையில் வெற்றி பெற்ற சிவராஜின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது.

மஇகாவின் சார்பில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் நிலையில் அந்த ஒருவருக்கு முழு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது சந்தோஷமான ஒன்றுதான்.

வீணே குறைகளை மட்டும் சுட்டி காட்டி கொண்டிருக்காமல் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பதவியில் டத்தோஶ்ரீ சரவணனின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது துன் வீ.தி.சம்பந்தன் அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத் தொகுதி சீராய்வு பணிகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீரமைப்பில் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் மற்றொரு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ம இகாவுக்கு இரு அமைச்சர்கள் என்பது அப்போதே கிடைத்தது.

பின்னர் ஆதி.நாகப்பனும், துன் ச.சாமிவேலு ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமைத்துவத்தில் துன் சாமிவேலு மட்டும் ஒரே அமைச்சராகவும் இரு துணை அமைச்சர்களும் பதவி வகித்தனர். துன் மகாதீர் காலத்தில் இரு அமைச்சர்கள் பதவிக்கு கோரிக்கைக்கு விடுத்தும் பலனில்லை.

பின்னர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல், டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் முழு அமைச்சர்களாக பதவி வகித்தனர் என்பதெல்லாம் மஇகாவின் வரலாறு.

மஇகாவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் போது ஜசெகவுக்கு இரு முழு அமைச்சர்கள், பிகேஆர் கட்சிக்கு ஒருவர், துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் பிகேஆருக்கு ஏன் இரு முழு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை? என யாரும் கேள்வி எழுப்பவில்லை.

பொன்.வேதமூர்த்தி வழங்கப்பட்ட அமைச்சர் பதவிக்கூட இந்தியர்களின் ஆதரவை திரட்டியதாலும் ஹிண்ட்ராஃப் அமைப்பை வழிநடத்தியதாலும் மட்டுமே வழங்கப்பட்டது.


டத்தோஶ்ரீ சரவணன் அரசியலில் பரந்த அனுபவம் கொண்டவர். பல்வேறு அமைச்சுகளில் திறம்பட சேவையாற்றியுள்ளார். அவரின் பரந்த அரசியல் அனுபவம் நிச்சயம் புதிய கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்களுக்கு சாதகமான பலனை ஏற்படுத்தும்.

அதே வேளையில் புதிய கூட்டணி ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா விடுபட்டு போய்விடக்கூடாது எனும் நோக்கில் ம இகா சார்பில் டத்தோஶ்ரீ சரவணனை முன்மொழிந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கும் இவ்வேளையில் பாராட்டுகிறேன்.  தெரிவித்துக் கொள்வதாக மணிமாறன் குறிப்பிட்டார்.

ஓர் அமைச்சர் என்பது மட்டும் மஇகாவின் இலக்காக இருக்காது. துணை அமைச்சர் பதவிகளையும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கோரியிருப்பார். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒருவரை மட்டுமே பிரதிநிதியாய் கொண்டுள்ள நிலையில் பதவிக்கு அழுத்தம் கொடுப்பதை காட்டிலும் அந்த பதவியின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு ஆக்ககரமான திட்டங்களை செயல்படுத்த வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கலாம். எண்ணிக்கையை காட்டிலும் தரமான சேவையே மஇகாவின் இலக்காக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழிநடத்தலாம் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment