Saturday 14 March 2020

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துமா கோவிட்-19?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டில் நிலவி வந்த அரசியல் நெருக்கடி தற்போது ஒரு முடிவுக்கு வந்து சுமூகமான சூழலில் சென்றுக் கொண்டிருந்தாலும் மலேசியர்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியாத வகையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது கோவிட்-19 வைரஸ்.

சீனாவில் தொடங்கிய இந்த உயிர்கொல்லி வைரஸ் தற்போது உலகளாவிய நிலையில் பரவி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் மட்டும் 81,000 பேரை பாதித்துள்ள கோவிட்-19 வைரஸ் நோயினால் இத்தாலி, ஈரான், தென் கொரியா, சிங்கப்பூர், இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சவுதி அரேபியா, மலேசியா என உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதமாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸால் உலக அளவில்  ஏற்றுமதி, இறக்குமதி தொழில் உட்பட சுற்றுலாத் துறை, தொழில் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் நிலவி வரும் தொழில் முடக்கத்தின் தாக்கம்  பெட்ரோலிய உற்பத்தித் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சவுதி அரேபியாவுக்கும் - ஈரானுக்குமான வர்த்தக் போராக மாறி இன்று பெட்ரோல் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது உலக பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளது.

பெட்ரோல் விலை இன்னும் வீழ்ச்சி காணலாம் என கணிக்கப்படும் நிலையில் அதன் தாக்கம் மலேசியாவின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.

ஏற்கெனவே அரசியல் நெருக்கடி காரணமாக நிலையற்ற சூழல் நிலவும் இவ்வேளையில் கோவிட்- 19 வீரியம் தற்போது மலேசியாவில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.  இது இன்னும் தொடருமேயானால் 1998இல் நாடு எதிர்கொண்டமிகப் பெரிய பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மலேசியர்களிடையே தொற்றி கொண்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டாலும் இன்னும் போர்க்கால முறையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கோவிட்-19 வைரசிடமிருந்து காக்கப்பட வேண்டியது  மனிதர்கள் மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரமும் தான்.

No comments:

Post a Comment