Wednesday, 24 July 2019

அரசியல் விழிப்புணர்வுமிக்கவர்களாக இந்தியர்கள் உருமாற வேண்டும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய அமைச்சர்களையே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒவ்வோர் அமைச்சுகளிலும் உள்ள வாய்ப்புகளை மலேசிய இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இந்திய சமுதாயம் மாறும்போதுதான் நமது பொருளாதார பலமும் மாற்றம் காணும்.

இன்றைய சூழலில் நமது சமூகத்தினர் கல்விக்கும் ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மட்டுமே போராடி கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் அமைந்தாலும் பிரித்தாளும் கொள்கை கடைபிடிக்கப்படும்போது அதனால் நமக்கான சில உரிமைகள் பறிக்கப்படும்போது அதனை எதிர்த்து போராடுவதில் தவறில்லை.

ஆனால் உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில் நமது வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலையையும் மேம்படுத்திக் கொள்கின்ற நிலைக்கு இந்திய சமுதாயம் மாற வேண்டும்.

வாய்ப்புகள் மறுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் இந்திய அமைச்சர்களையும் தலைவர்களையும் சாடுகிறோம். ஆனால் இந்திய அமைச்சர்களை தவிர்த்து பிற இனத்தவர்கள் பதவி வகிக்கும் எத்தனை அமைச்சுகளின் கீழ் இயங்கும் துறைகளிலுள்ள வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்?

குறிப்பாக விவசாய அமைச்சில் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதில் உள்ள வாய்ப்புகளை எத்தனை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்?

பிற இனத்தவர்கள் பதவி வகிக்கும் அமைச்சு என்பதால் அங்குள்ள வாய்ப்புகளை பெறுவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம். ஆனால் அதுதான் நமது சமுதாயத்தின் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவு என்பதை உணர மறுக்கிறோம்.

இந்திய அமைச்சர்களை மட்டும் குறை கூறிக் கொண்டிருக்காமல் நமக்கான வாய்ப்புகளை தட்டி பெறுவதில் அரசியல் விழிப்புணர்வுமிக்க சமுதாயமாக இந்தியர்கள் உருமாற வேண்டும் என்று மின்னல் பண்பலையில் நேரலை நிகழ்ச்சியின்போது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment