Wednesday 1 May 2019

தமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர் அரசு கைவிட்டதில்லை- மந்திரி பெசார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மாநில அரசு பல ஆக்ககரமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ அமிருடி சாரி தெரிவித்தார்.

இந்திய மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க முனைகிறது.

தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த எத்தகைய பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றுக்கு சுமூகமான தீர்வு காணும் அதே வேளையில் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அதிகமான மானியங்களை ஒதுக்கீடு செய்யும் முதன்மை மாநிலமாக சிலாங்கூர் மாநிலம் திகழ்கிறது என்று 2018ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.


எந்த மொழி பள்ளியாக இருந்தாலும் அதனை புறக்கணிக்காமல் அப்பள்ளிகளின் தேவையறிந்து உதவிகளை வழங்கி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், வறுமை சூழலில் உள்ள இந்திய மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணமாக 300 வெள்ளி வழங்கப்படுகிறது.
இந்திய சமுதாயம் கல்வி துறையில்  பிங்தங்கி விடக்கூடாது எனும் நோக்கில் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களை  முன்னெடுத்து வருகிறது. வருங்காலத்திலும் அத்திட்டங்கள் தொடரப்படும் என்ற டத்தோ அமிருடின் சாரி,  யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியை பெற்றுள்ள மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையை பெறுவதோடு வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சீனாவில் நடந்த ஆசிய பனிச்சறுக்கு போட்டியில் ஐந்து தங்கத்தை வென்று சாதனை படைத்த சிறுமி ஶ்ரீ அபிராமியை டத்தோ  அமிருடின் சாரி பாராட்டி சிறப்பு செய்தார்.


சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் நடந்தேறிய இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், இந்திய கிராமத் தலைவர்கள், பொது இயக்கத்தினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment