ரா.தங்கமணி
மே 9….. இன்றைய நாள் மலேசிய அரசியல் வரலாற்றை ஒரு நிமிடம் புரட்டி
போட்ட நாள். உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருந்த ஒரு வரலாற்று அத்தியாயத்தை மலேசியர்கள் சாதித்து காட்டிய நாள்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில்
60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மாற்றாக நம்பிக்கைக் கூட்டணி
அரசாங்கம் ஆட்சி புரிய மலேசிய வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை நிலைநாட்டிய வரலாற்றுப்பூர்வ
நாளின் ஓராண்டு நிறைவு விழாவே இன்றைய கொண்டாட்டம் ஆகும்.
ஆட்சி மாற்றம் நிகழுமா?
60 ஆண்டுகால தேசிய முன்னணிக்கு முடிவு கட்டப்படுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாற்றத்தை
முன்னெடுக்க நாங்கள் தயார் என துணிச்சலுடன் வீறுகொண்டு எழுந்த இளம் தலைமுறை வாக்காளர்களின்
கனவு நிஜமானது நாளாக மே 9 கருதப்படுகிறது.
ஆட்சி மாற்றம், புதிய தலைமைத்துவம்,
புதிய விடியலுக்கு மத்தியில் மலேசியர்களின் ஒருமித்த மக்களாட்சியாக ‘புதிய மலேசியா’
எனும் சித்தாந்தத்துடன் ஆட்சி பீடத்தில் அரியணை அமர்ந்தது நம்பிக்கைக் கூட்டணி (PAKATAN HARAPAN) அரசாங்கம்.
இன்றைய நாள் நம்பிக்கைக்
கூட்டணி ஆட்சியமைத்தது என்பதை விட சிறந்த சேவை செய்யாத அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து
வீழ்த்தும் வாக்காளனின் ‘ஒரு விரல் புரட்சி’ நாள் என்று சொல்வதே சாலச் சிறந்ததாகும்.
ஒரு விரல் புரட்சிக்கு பின்னர்
ஆட்சியமைத்த நம்பிக்கைக் கூட்டணி மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் என்ற எதிர்பார்ப்பு
மக்களிடம் மேலோங்கி இருந்த நிலையில் நம்பிக்கைக் கூட்டணியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த உண்மையை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களே ஒப்புக்
கொள்வர்.
இந்த ஓராண்டு காலத்தில் மக்களிடத்தில்
மேலோங்கியிருக்கும் அதிருப்திக்கு காரணம் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
பல நிறைவேற்றப்படாததும் மக்கள் பிரதிநிதிகளின் ஆக்கப்பூர்வமற்ற செயல்பாடுகளுமே ஆகும்.
வெ.1,500.00 அடிப்படைச் சம்பளம்,
பிடிபிடிஎன் கல்விக் கடன் ஒத்திவைப்பு, டோல் கட்டணம் அகற்றப்படும், வெ.1.50க்கு பெட்ரோல்
விலை நிர்ணயம் போன்ற நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதிகள் இளம் வாக்காளர்களை பெரிதும்
கவர்ந்தது. ஆனால் ஆட்சி அமைத்த பின் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் சுணக்கம்
கண்டதன் எதிரொலியே இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்திக்கு அடித்தளம் ஆகும்.
நாட்டின் நிதி நிலைமை படுமோசமாக
உள்ளதால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஆட்சி
அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் கூறினாலும் எதிர்பார்ப்புகளை சுமந்தபடி ஆட்சி மாற்றம்
செய்த வாக்காளருக்கு இந்த அறிவிப்பு ஓர் ஏமாற்றமே ஆகும். அந்த ஏமாற்றமே நம்பிக்கைக்
கூட்டணிக்கு எதிரான எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் சூழலில் வந்து நிற்கிறது.
நாடு கொண்டுள்ள கடனையும்,
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீதான 1எம்டிபி ஊழலையும் சொல்லி சொல்லியே ஓராண்டு
காலத்தை கடந்து விட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசு மக்கள் மத்தியில் ஓர் பலவீனமாக அரசாக
தன்னை காட்டி வந்துள்ளதும் இந்த அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள்
போதிய அனுபவம் பெறாதவர்கள் என்பதால் சில திட்டங்களில் முக்கிய முடிவை எடுக்க முடிவதில்லை
என்ற கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அனுபவத்தை வளர்த்துக் கொள்ள ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டோம் என கூறுவது
எவ்வள்வு பெரிய பலவீனம் என்பதை மதிப்பிற்குரிய மாண்புமிகுகள் உணரவில்லையா?
நாளை தொடரும்…
No comments:
Post a Comment