Sunday 10 September 2017

மாணவர்களின் மேம்பாட்டில் ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவதேன்? - அபிராம் கேள்வி

புனிதா சுகுமாறன்

-ஈப்போ
பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பொது இயக்கங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் முழுமையான ஆதரவை வழங்காமல் இருந்தால் அடுத்தடுத்த நிகழ்வுகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என மலேசிய அபிராம் இயக்கத்தின் தேசியத் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

நாளை 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள கல்வி யாகத்திற்கு மிக குறைவான மாணவர்கள் வந்திருப்பது வேதனையான ஒன்றாகும்.
மாணவர் சமுதாயம் சிறந்த நிலையை அடைய வேண்டும்  என்பதுதான் நமது எண்ணம். ஆனால் அந்த எண்ணத்தை ஈடேற்ற வேண்டிய பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் தங்கள் கடமையிலிருந்து விலகி நிற்பதால் நாளை பாதிக்கப்படுவது மாணவர் சமுதாயமே என்பதை உணர வேண்டும்.
புந்தோங் தொகுதி மலேசிய அபிராம் இயக்கத்தின் ஏற்பாட்டில் தேவி ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 'கல்வி யாகம்' நிகழ்வுக்குப் பின்னர் உரையாற்றிய சண்முகம் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்காக சுற்று வட்டாரத்திலுள்ள சில பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் மாணவர்களின் பங்களிப்பு மிக குறைவாகவே உள்ளது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இங்கு அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருப்பர். இதனால் இங்கு மாணவர்கள் பங்களிப்பு குறைவாக உள்ளது.

அதேபோன்றுதான் பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். பிள்ளைகளுக்கு ஒதுக்க நேரம் இல்லை என சாக்குபோக்கு மட்டுமே கூறுகின்றனர். பிள்ளைகளின் வளர்ச்சி முழுமையான அக்கறை கொண்டுள்ள பெற்றோர் அவர்களின் மேம்பாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்; அவர்களின் தேவைகளை பூர்த்தி  செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய புந்தோங் தொகுதி அபிராம் தலைவி லெட்சுமி நாயரின் முயற்சியை வெகுவாக பாராட்டுவதாக சண்முகம் கூறினார்.

இந்த நிகழ்வில் புந்தோங் மைபிபிபி தேர்தல் மைய ஒருங்கிணைப்பாளர் டத்தோ நாரான் சிங், பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, மைபிபிபி புந்தோங் தொகுதித் தலைவர் செபஸ்டியன், தொழிலதிபர் டத்தோ டாக்டர் சக்திவேல், அமுசு.ஏகாம்பரம், பேராக் சமூகநல பாதுகாப்பு இலாகாவின் அதிகாரி பார்வதி உட்பட அபிராம் இயக்க செயலவையினரும் பெற்றோரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment