Friday 22 September 2017

'பாரதம்' செய்தியின் எதிரொலி: மகேசனின் துயரை போக்கியது'அபிராம்'

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'வெளியே கல் வீடு; உள்ளே வறுமையின் கொடுமை- உதவிக்கு ஏங்கும் இந்தியக் குடும்பம்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியின் பலனாக மகேசன் குடும்பம் எதிர்நோக்கும் அவலநிலையை போக்க மலேசிய அபிராம் இயக்கம் அதிரடி களத்தில் இறங்கியது.

புந்தோங் ஜெயாவில் வசித்து வரும் மகேசன் 'சொரியாசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவரின் தாயார், நான்கு பிள்ளைகளையும் அவரின் மனைவி வேப்பிலையம்மாள் தனியொருவராக போராடி குடும்பத்தை வழிநடத்தி வருகின்றார்.

'கல் வீட்டில் வசிப்பதால் உதவிக்கரம் நீட்ட முனவரும் அரசியல்வாதிகள்கூட ஒதுங்கி கொள்கின்றனர்' என மன ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார் மகேசன்.

அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் தவிக்கும் இந்த குடும்பத்தின் துயரச் செய்தியை அறிந்த மலேசிய அபிராம் இயக்கம் உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.
மகேசனின் வீட்டுக்கு தமது குழுவினருடன் சென்ற அபிராம் இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கினர்.

அபிராம் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆதரவோடு திரட்டப்பட்ட இந்த மளிகைப் பொருட்கள் யாவும் அவர்கள் வயிறார உண்பதற்கு பேருதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த சண்முகம், மளிகைப் பொருட்களை வழங்கும் இந்த உதவி தொடர்ந்து வழங்கப்படும்  என கூறினார்.
அதோடு, அபிராம் இயக்கத்தின் சமூகநல பிரிவின் தலைவி திருமதி லட்சுமி நாயர்,  அன்றாடம் அவர்களின் வீட்டுக்குச் சென்று நிலவரங்களை கண்டறிந்து வருகின்றார்.

பேராக் மாநில அபிராம் தலைவர் அற்புதராஜ், அபிராம் இயக்கத்தின் விளையாட்டுப் பிரிவு தலைவி திருமதி மகேஸ்வரி உட்பட செயலவையினர் ஆகியோர் மகேசனின் நிலையை கேட்டறிந்தனர்.

No comments:

Post a Comment