Wednesday 20 September 2017

'ஒழுங்காக பேசி விட்டு வா'- தாயாரின் ஆசியை நினைவுக்கூர்ந்த டத்தோஶ்ரீ சுப்ரா

சென்னை-
மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க்கல்வி முன்னிட்டு மலேசிய கல்வி அமைச்சும், சென்னை பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவரும்  மலேசிய சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் 'ஒழுங்காக பேசி விட்டு வா' என தன் தாயார் கூறியதை நினைவுக் கூர்ந்தார்.

'நான் எத்தனையோ மாநாடுகளில் உரையாற்றச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் எதுவும் கூறாத என் தாயார், இன்று நான் சென்னை பல்கலைக்கழகத்தில் உரையாற்றப் போகிறேன் என்று கூறியதும் 'ஒழுங்காக பேசி விட்டு வா' என கூறி வழியனுப்பி வைத்தார்.

"தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மீது உலகளாவிய அளவில் மலேசியர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் வைத்திருக்கும் மரியாதையை நாம் இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்” என கூறி உரையை தொடங்கிய டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், மலேசியாவில் பினாங்கு,  பிரீ ஸ்கூலில்  முதன் முதலாக தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டதையும் அப்பள்ளியில் தான் பயின்றதையும் பெருமிதத்துடன் கூறினார்.
“சுமார் 200 ஆண்டுகளாக தமிழ்மொழி பள்ளிகள் மலேசியாவில் நிலைபெற்று இருக்கிறது.  மலேசிய இந்தியர்கள் தங்களின் கலை கலாச்சாரத்தை கடைப்பிடித்து வரும் அதே வேளையில், மலேசிய அரசியல் அமைப்பிலும் தமிழ்மொழி மலேசியாவில் நிலைத்து வாழ்கிறது.

மலேசியாவில் 530 தமிழ்ப்பள்ளிகள் சீரும் சிறப்புமாக இயங்கி வருகின்றன. சுமார் 10,000 ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் வேளையில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். புதிய தமிழ்ப் பள்ளிகளை தொடர்ந்து நிர்மாணித்து வருவதோடு, இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களையும் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து பயிற்சியளித்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று டாக்டர் சுப்ரா தனதுரையில் தெரிவித்தார்.

“தமிழர்கள் உலகம் எங்கும் சென்று சேர்ந்த இடங்களில் எல்லாம் தமிழ் உணர்வும், தமிழ் சிந்தனையும் நிலைத்து நிற்கின்றது. மலேசியாவில் அரசாங்கத்தில் தமிழர்கள் ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதோடு, அரசாங்க ஆதரவோடு, தமிழ் மொழியை அரசாங்கப் பள்ளிகளிலேயே முழுக்க முழுக்க பயிலும் பெருமை மலேசியாவுக்கு இருக்கிறது.

அதே வேளையில் மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி என்ற தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு தமிழ் மொழியை பல்கலைக்கழக அளவில் பயிலும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உலகம் எங்கும் தமிழர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் நம் தமிழ்மொழி வாழ்கிறது. தமிழர்களிடையே எத்தகைய பிரிவுகள் இருப்பினும் தமிழ்மொழி அனைவரையும் ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கிறது”.

உலகம் எங்கும் தமிழர்கள் இருந்தாலும், மலேசியாவில்தான் தமிழுக்கென பிரத்தியேகமாக தமிழ் வாழ்த்து பாடப்படுகிறது என்பதையும், மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்தப் பாடலைத்தான் நாங்கள் பாடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டிய டாக்டர் சுப்ரா, அந்தப் பாடலை எழுதிய அமரர் சீனி நைனா முகம்மதுவை அவர் நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

இதன் மூலம் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழர்களாக வாழ்வார்கள் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என்பதை நினைவூட்டிய டாக்டர் சுப்ரா மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான இணைப்புப் பாலம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும், மேம்படுத்தப்படும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவோம் என்றும் உறுதி கூறினார்

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரோடு மலேசிய கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன்,  மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியும் கலந்து சிறப்பித்தார்.

No comments:

Post a Comment