Sunday 31 January 2021

மலேசிய வரலாற்றில் முதன் முறையாக மின்னியல் பொங்கல் விழா - கணபதிராவ் தொடங்கி வைத்தார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில் சமய, கலாச்சார நிகழ்வுகளும் களையிழந்த நிலையில் உள்ளன. எந்தவொரு இந்தியர் சமய நிகழ்வுகள் மறைந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் கோத்தா கெமுனிங் வட்டார இந்தியர்கள் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் 'மின்னியல் பொங்கல் விழா' சிறப்பாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில் இன்றுக் காலை தாமான் ஶ்ரீ மூடாவில் இப்பொங்கல் விழா தொடங்கி வைத்தார்.

கோத்தா கெமுனிங் மட்டுமல்லாது கிள்ளான், உலு சிலாங்கூர், பந்திங், கோலசிலாங்கூர் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் 'ZOOM' செயலியின்  வழி ஒருங்கிணைந்து தத்தம் இல்லங்களில் பொங்கல் வைத்து குதூகலித்தனர்.

இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த கணபதிராவ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மக்கள் ஒன்றுகூடலை சிதறச்செய்துள்ளது. ஆயினும் நமது சமய  மரபுகள் அழிந்திடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகவும் உள்ளது.

அதனை முன்னிறுத்தியே 'ZOOM' மின்னியல் வாயிலாக பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து 200க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் அதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருக்கலாம். அதையும் தாண்டி நமது கலாச்சாரத்தின் அடையாளங்களில் பொங்கலும் ஒன்று. அதனை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வது நமது கடப்பாடாகும். அதனை உணர்ந்து இந்த பொங்கலை சிறப்பாக ஏற்பாடு செய்த நிகழ்வு ஏற்பாட்டாளர் சுகுமாறன் முத்துசாமியை வெகுவாக பாராட்டுகிறேன் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

மேலும், பொங்கல் விழா என்றாலே ஒன்றுகூடி பொங்கல் வைப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதைய நெருக்கடி காலகட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கவும் பொங்கல் விழாவின் மரபை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்லவும் இந்த மின்னியல் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று சுகுமாறன் முத்துசாமி கூறினார்.

மலேசியாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட மின்னியல் பொங்கல் விழாவில் 1,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராயுடு, யுகராஜா, தாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கோ.குமரேசன், உதவித் தலைவர் மோகன் பொன்னன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment