Thursday 14 January 2021

இந்திரா காந்தியின் வழக்கை ரத்து செய்யக்கோரி ஐஜிபி உட்பட 4 தரப்பினர் முறையீடு

கோலாலம்பூர்-

தமது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுக் கொடுப்பதில் தோல்வி கண்ட அரச மலேசிய போலீஸ் படை உட்பட நான்கு தரப்பினர் மீது திருமதி இந்திரா காந்தி  தொடுத்துள்ள வழக்க ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான திருமதி இந்திரா காந்தி செய்துள்ள வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஐஜிபி, அரச மலேசிய போலீஸ் படை, உள்துறை அமைச்சு, அரசாங்கம் ஆகிய தரப்பினர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர்ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.

விளம்பரம்


தமது மகளை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்து தமது மகள் பிரசன்னா டிக்சாவை தம்மிடம் மீண்டும் ஒப்படைப்பதில் இந்த நான்கு தரப்பும் தோல்வி கண்டுள்ளதை அடுத்து திருமதி இந்திரா காந்தி நான்கு தரப்பினர் மீதும் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை தழுவிய இந்திரா காந்தியின் முன்னாள் கணவர்  தமது மகள் பிரசன்னா டிக்சாவையும் 2009இல் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்துள்ளார்.

இதன் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரசன்னாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் 2014இல் தீர்ப்பளித்தப் பின்னரும் இன்னமும் முகமது ரிடுவானையும் பிரசன்னா டிக்சாவையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் படை தோல்வியை சந்தித்துள்ளது.


No comments:

Post a Comment