Sunday 10 September 2017

தேமு வெற்றியே இலக்கு; மஇகா வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்வோம் - டத்தோ சம்பந்தன்

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை நிலைபெறச் செய்வதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். யார் நம்மை தடுத்தாலும் நமது இலக்கு தேமு வெற்றி பெறுவதே ஆகும் என ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் பொதுத் தேர்தல்களிலும் இடைத் தேர்தல்களிலும் தேசிய முன்னணி வெற்றிக்காக பாடுகின்ற கட்சி ஐபிஎப் ஆகும். ஐபிஎப் கட்சி யாரிடமும் விரோதப் போக்கை கடைபிடிக்கவில்லை.  ஆனால் நம்மைத்தான் (ஐபிஎப்) சிலர் வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
அதற்கான நமது சேவையை நாம் என்றுமே நிறுத்திக் கொண்டது இல்லை. தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆக்ககரமான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன.
தேசிய முன்னணியில் ஓர் பங்காளி கட்சியாக ஐபிஎப் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன.

தேசிய முன்னணியில் உள்ள பல உறுப்பு கட்சிகள் ஐபிஎப் கட்சியுடன் ஒத்துழைப்பு நல்கும்போது மஇகா மட்டுமே நம்முடன் ஒத்துழைப்பு நல்காமல் ஒதுங்கி நிற்கின்றது. இருந்தாலும் பரவாயில்லை. வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளிலும் அவர்களின் வெற்றிக்காக ஐபிஎப் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என இங்கு கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற பேராக் மாநில ஐபிஎப்  கட்சியின் 26ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றுகையில் டத்தோ சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
மேலும், வரும் பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள், 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் ஐபிஎப் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை தேமு பரிசீலிக்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, பேராக்  மாநிலத்தில் நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி ஐபிஎப் கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என கடந்த பொதுத் தேர்தலின்போதே  கோரிக்கை விடுக்கப்பட்டது. அது இன்னமும் கைகூடவில்லை.
ஆனாலும் வரும் பொதுத் தேர்தலில் தேமு ஆட்சி அமைத்ததும் நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என டத்தோ சம்பந்தன் வலியுறுத்தினார்.
இந்த பேராளர் மாநாட்டிற்கு பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார். அதோடு ஐபிஎப் கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.மாணிக்கம், ஐபிஎப் கட்சியின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவி திருமதி ராஜம்மா, மாநில மகளிர் பிரிவுத் தலைவி திருமதி பிரேமா மேரி, மைபிபிபி கட்சியின் புந்தோங் தேர்தல் மைய ஒருங்கிணைப்பாளர் டத்தோ நாரான் சிங்,  பேராக் மஇகா செயலாளர் கி.தங்கராஜு, பேராக் மாநில ஐபிஎப் கட்சி உதவித் தலைவர் சாமிராஜு, பிரிம் இயக்கத்தின் தலைவர் அரிப் உட்பட கட்சி பேராளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment