Tuesday, 26 September 2017

டத்தோ புலவேந்திரனின் மாமியார் பச்சையம்மா காலமானார்

செபெராங் ஜெயா-
அனைவரையும் அரவணைத்து அன்பாக வழிநடத்திச் செல்பவர் , எங்களின் குறைகளை நிவர்த்தி செய்பவர் ,விரைவில் எங்களை விட்டுச் செல்வார் என நாங்கள் நம்பவில்லை.  அன்பான பொக்கிஷத்தை இழந்து விட்டேன் .என டத்தோ புலவேந்திரன் கண்ணீரோடு தெரிவித்தார்

நேற்று முன்தினம் டத்தோ புலவேந்திரனின் மாமியார் திருமதி பச்சையம்மா த/பெ துரைசாமி என்ற சாந்தா (வயது 69) உடல் நல  குறைவினால் பேராக், ஹல்ட் சிம்பாங்கிலுள்ள  தமது இல்லத்தில் காலமானார் .
மரணமடைந்த திருமதி பச்சையம்மா நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பினாங்கு மாநிலம் உட்பட பேராக்,கோலாலம்பூர் என பல இடங்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர்.

தோட்டப்புற வாழ்கையாக இருந்தாலும் கூட என் தாய் தந்தையர் எங்களை சிறப்பாக வளர்த்தனர். ஐந்து பிள்ளைகளில் ஒருவர் காலம் சென்ற நிலையில் நால்வர்களையும் சிறப்பாக வளர்த்தனர். அன்பு, ஒழுக்கம் , பண்பு  போன்றவற்றை கற்றுக் கொடுத்ததன் விளைவாக சிறந்தவளாக வளர்த்து நிற்கும் தமது வெற்றியை காண அவரின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. என் அம்மாவிற்கு ஈடு ஏதும் இல்லை என  டத்தின் கமலேஸ்வரி வேதனையுடன் தெரிவித்தார் .
அன்னாரின் நல்லுடல் இந்து ஆகமபடி நடைபெற்ற இறுதி சடங்குகளுக்கு பின்னர், தைப்பிங் பொக்கோ அசாம் மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது .

Monday, 25 September 2017

28 தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்- டத்தோஶ்ரீ சுப்ரா





கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா  9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மஇகா போட்டியிடக்கூடிய தொகுதிகளையும் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களையும்  அடையாளம் காண்கின்ற நிலையில் அங்கு வெற்றியை நிலைநாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.


மஇகா வேட்பாளர் பட்டியல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் இறுதி நேரத்தில் மாற்றங்கள் நிகழலாம் என மஇகா 71ஆவது பேராளர் மாநாடு தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.


இதனிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார். அந்த தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்காது எனவும் அவர் சொன்னார்.

வெற்றி வேட்பாளர் பட்டியல் தேவை - மஇகாவிடம் பிரதமர் நஜிப் வலியுறுத்து


கோலாலம்பூர்-
அனைத்து இன மக்களும் ஏற்கக்கூடிய மஇகா வேட்பாளர் பட்டியல்தான் தனக்கு தேவை. தரமான, நம்பகமான அந்த வேட்பாளரின் வெற்றியே மிக முக்கியமானது என பிரதமர்  டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய தொகுதிகளை வெல்ல  வேண்டும் என்றால் இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற இனத்தவர்களின் ஆதரவையும் அவர்கள் பெற வேண்டும்.



வெற்றி பெறக்கூடிய  வேட்பாளர்களை களமிறக்கினால் மட்டுமே வெற்றியை நிலைநாட்ட முடியும் என தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப்  குறிப்பிட்டார்.

மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றியை டத்தோஶ்ரீ நஜிப், மஇகா வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை உருவாக்குவது அவசியமாகும்.




போட்டியிடக்கூடிய ஒவ்வொரு தொகுதியிலும் இந்தியர்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருப்பதில்லை

பிற இனத்தவர்களின் வாக்குகளை பெறக்கூடிய தகுதி வாய்ந்த வேட்பாளர்களை மஇகா தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தனிப்பட்ட கொள்கைகள்- மாறுபட்ட சிந்தனைகள்; அதுவே எதிர்க்கட்சி- பிரதமர் சாடல்

கோ.பத்மஜோதி, படங்கள்: வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
தனிப்பட்ட கொள்கைகள், மாறுபட்ட சிந்தனைகளை கொண்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணியால் மலேசியர்களுக்கு சிறந்ததொரு ஆட்சியை வழங்க முடியாது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சாடினார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துன் மகாதீர் ஒரு கொள்கையை கொண்டுள்ளார், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு கொள்கையை கொண்டுள்ளார், லிம் கிட் சியாங் கூட மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கலாம்.
இத்தகையதொரு மாறுபட்ட சிந்தனையும் தனிபட்டகொள்கையும் மலேசியாவின் சிறப்பான ஆட்சிக்கு ஒத்துவராது.

தனிகொள்கையும் மாறுபட்ட சிந்தனையும் கொண்டுள்ள தலைவர்களே எதிர்க்கட்சியில் உள்ளனர். இத்தகையதொரு சித்தாந்தபோக்கு மலேசியாவுக்கு ஏற்புடையதல்ல.

ஒன்றிணைக்கப்படாத கொள்கையும் சிந்தனையும் கொண்ட எதிர்க்கட்சியினரால் நாட்டுக்குதான் பாதகம் ஏற்படும். இது ஒரு அபாயகரமானதும் கூட என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

பிரதமர் முன்னிலையில் தொடக்கம் கண்டது மஇகா 71ஆவது பேராளர் மாநாடு

ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி
படங்கள்: வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாடு  புத்ரா உலக வாணிப மையத்தில் துன் ரசாக் மண்டபத்தில் தொடக்கம் கண்டது
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலை தொடங்கிய இந்த மாநாட்டில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, துணை அமைச்சர்கள் டத்தோ எம்.சரவணன், டத்தோ ப.கமலநாதன், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் மன்சோர், மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், தேசிய முன்னணி பங்காளி, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், மஇகா பேராளர்கள் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, 24 September 2017

மஇகாவில் தேவை உருமாற்றம்; டத்தோஶ்ரீ சுப்ரா தலைமையில் முன்னெடுக்கப்படுமா?


சிறப்பு கண்ணோட்டம்: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கட்சியில் நிலவிய ஊட்பூசல்கள் தீர்க்கப்பட்டு ஒரு சுமூகமான சூழலில் தனது 71ஆவது பேராளர் மாநாட்டை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது மஇகா. டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடத்தப்படும் இந்த மஇகா மலேசிய இந்தியர்கள் மட்டுமின்றி கட்சியினரிடமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், எந்நேரத்திலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 14ஆவது பொதுத் தேர்தலே ஆகும்.

டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையேற்று வழிநடத்தும் மஇகா, கடந்த இரு பொதுத் தேர்தல்கள் கண்ட தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கான அஸ்திவாரமாக இந்த பேராளர் மாநாடு அமையலாம் என நம்பப்படுகிறது.

அதற்கு மஇகா சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட திருத்தம், வேட்பாளர் விவகாரம், தொகுதி பங்கீடு, இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவிக்கவிருக்கும் திட்டங்கள் யாவும் என்னவென்பதே இன்றைய கேள்வியாகும்.

தாய்க்கட்சி
மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியாக திகழ்வது மஇகா மட்டுமே. பல்வேறு கட்சியினர் மஇகாவை  குறை சொன்னாலும் இந்தியர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அனைவரின் விரலும் முதலில் நீள்வது மஇகாவை நோக்கியே. அதுவே மஇகா இந்தியர்களின் தாய்க்கட்சி என்பதற்கான அடையாளம் ஆகும்.
14ஆவது பொதுத் தேர்தலை நோக்கி...
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் அதில் களமிறக்கப்படும்  மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது காலத்திற்கேற்ற அவசியமாகியுள்ளது.

தேசிய முன்னனியில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என மார்தட்டி கொள்ளும் மஇகா, இத்தேர்தலில் களமிறக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும்.

ஏனெனில் பெரும்பாலான மாநில சட்டமன்றத் தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் தோல்வியை தழுவுவதால் அங்கு இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலையை மாற்றியமைக்கூடியது அவசியமாகும். ஏனெனில் பல மாநிலங்களில் அம்னோ வேட்பாளர்கள் மட்டுமே அதிக தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அம்னோவின் தயவிலே சில மாநிலங்களில் இந்தியர்களுக்கு ஆலோசகர், சிறப்பு அதிகாரி போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாமல் நியமனப் பதவிகளை நம்பிக் கொண்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா அடிமட்ட நிலைக்கு செல்ல நேரிடும்.

அம்னோவுக்கு எதிர்ப்பாக தற்போது பெர்சத்து கட்சி பலம் பெற்று வருகின்ற சூழலில் வரும் தற்போது அம்னோ வசமுள்ள சில தொகுதிகள் எதிர்க்கட்சி வசம் வீழ்ந்தால் மாநில ஆட்சியில் கூட இடம்பெற முடியாத இக்கட்டான சூழலுக்கு மஇகா தள்ளப்பட்டு விடும் என்பதை தலைவர்கள் நன்கு உணர வேண்டும்.
தேவையான உருமாற்றங்கள்
மஇகா தற்போது தன்னை உருமாற்றி கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உள்ளது. சொல்லப் போனால் மஇகாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் பல விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தற்போது மஇகா அமைப்பு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வந்து தேசிய, மாநில, தொகுதித் தலைவர்களுக்கான தேர்தலை நடத்த உத்தேசித்து வருகிறது.

அதேபோன்று பொதுத் தேர்தலில் தோல்வி காண்பவர்களுக்கு இரு தவணைக்கு மேல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமை, மக்கள் விரும்புபவர்களுக்கே போட்டியிட முன்னுரிமை, மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ளுதல், மக்களோடு மக்களாக களமிறங்குதல், மக்கள் புறக்கணித்தவர்களுக்கு  உயர்பதவிகள் வழங்கப்படாமை போன்ற நடவடிக்கைகளையும் மஇகா மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் (இந்தியர்கள்) விரும்பும் கட்சியாக மஇகா தன்னை நிலைப்படுத்தி கொள்ள வேண்டும். அதுவும் 71ஆவது பேராளர் மாநாட்டை நடத்தும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தலைமையிலேயே ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மஇகாவை இந்தியர்கள் கைவிடாமல் அதன் வெற்றியை தக்க வைக்க பாடுபடுவர். இல்லையேல் இந்தியர்களே கைவிடும் இக்கட்டான சூழலுக்கு மஇகா தள்ளப்படும்.
இந்த உண்மையை தலைவர்கள்  இனியேனும் உணர்வார்களா?

2ஆவது முழு அமைச்சர் பதவி: டத்தோஶ்ரீ சுப்ரா முன்மொழிய வேண்டும் - கி.மணிமாறன்

-ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
கைநழுவி போன 2ஆவது முழு அமைச்சர் பதவிக்கான பரிந்துரையை மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முன்மொழிய வேண்டும் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வேண்டுகோள் விடுத்தார்.

மஇகாவின் 71ஆவது பொதுப் பேரவை நாளை 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மஇகாவை சார்ந்திருக்கும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
அவ்வகையில் கட்சி இழந்து நிற்கும் 2ஆவது முழு அமைச்சர் பதவியை  மீட்டெடுப்பதற்கு இந்த பேராளர் மாநாடு  வழிவகை காண வேண்டும்.
கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் வகித்து வந்த முழு அமைச்சர் பதவி 2015இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது பறிபோனது. பின்னர் 2016இல் கட்சியின் தேசிய துணைத் தலைவரான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு துணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.

இன்று நடைபெறும் மஇகா பொதுப் பேரவையில் இழந்து விட்ட மற்றொரு முழு அமைச்சர் பதவிக்கான பரிந்துரையை டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் முன்மொழிய வேண்டும் என சுங்கை சிப்புட் பேராளருமான  மணிமாறன் வலியுறுத்தினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் 20011ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகாவின் பொது பேரவையில் கட்சியின் தேசியத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் தோட்டத் தொழில், மூலபொருள் துணை அமைச்சராக பதவி வகித்து வந்த வேளையில் அவரை பிரதமர் துறை அமைச்சராக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்தது ஒரு வரலாறாகும்.

அதேபோன்றதொரு வரலாற்று பதிவினை நாளை நடைபெறும் மஇகா பேராளர் மாநாடு பதிவு செய்ய வேண்டும் என மணிமாறன் குறிப்பிட்டார்.

தற்போது மஇகாவை  பிரதிநிதித்து  டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முழு அமைச்சராகவும் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ எம்.சரவணன், டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் துணை அமைச்சர்களாக உள்ளனர்.

Saturday, 23 September 2017

ரஜினியின் புதுக் கட்சி அக்டோபர் 2ஆம் வாரத்தில் அறிவிப்பு?

சென்னை-
தமிழக அரசியல் களம் தினந்தோறும்  பரபரப்பைச் சந்தித்து வருகின்ற சூழலில்  நடிகர் ரஜினிகாந்தின் புதுக்கட்சி அறிவிப்பு அந்த பரபரப்பை இன்னும் மெருகேற்றியுள்ளது.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன் என்று கூறிய ரஜினிகாந்த், தன் அரசியல் வருகையை கடந்த மே மாதம் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இதுகுறித்து பல்வேறு கருத்துப் பறிமாற்றங்கள், வாதங்கள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நிச்சயம் ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரையும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

கட்சியின் பெயர், அதைப் பதிவு செய்யும் நடைமுறைகளை ஏற்கெனவே தமிழருவி மணியனின் ஆலோசனையுடன் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த். இப்போது கட்சிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார். அடுத்த இரு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்துவிடுவார் ரஜினி என்கிறார்கள்.

மின்சாரம் தாக்கி 9 யானைகள் பலி

கபோரோன்-
தண்ணீர் குடிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 9 யானைகள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உள்ள டுக்வி என்ற பகுதியில் தான் நிகழ்ந்துள்ளது.

காட்டில் திரிந்த யானைகள் கூட்டம் ஒன்று தண்ணீரைத் தேடி, காட்டை விட்டு வெளியே வந்தன. அப்போது குழாய் ஒன்று உடைந்து அதன் வழியாக வெளியேறி தண்ணீர் அங்கே குளமாக தேங்கிக் கிடந்தது.

தண்ணீரைப் பார்த்த யானைகள், உற்சாகமாக சென்று தண்ணீர் பருகின. தண்ணீர் வெளியேறிய இடம் சிறியதாக இருந்ததால், யானைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன.  

அப்போது, யானைகளில் ஒன்று, அருகில் இருந்த மின்சார கம்பம் மீது மோதியதால் அது கீழே வீழுந்தது. கீழே சாய்ந்த மின்கம்பிகள் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.

துரதிஷ்டவசமாக, தண்ணீரில் நின்றுக் கொண்டிருந்த 9 யானைகள் மீது மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தன. சில வினாடிகளில் 9 யானைகளும் உயிழிந்துள்ளன. தப்பிய சில யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போட்ஸ்வானா நாட்டில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யானைகள் வாழ்ந்து வருவதாக அனைத்துலக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

மகேசனின் துயர் போக்க நல்லுள்ளங்கள் தொடர் உதவி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'சொரியாசிஸ்' நோயினால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் மகேசனின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்துள்ளனர்.

அண்மயில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் வெளியிடப்பட்ட 'வெளியே கல் வீடு; உள்ளே வறுமையின் கோரம்' எனும் தலைப்பில் மகேசன், அவரது குடும்பத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவரிக்கப்பட்டன.
இச்செய்தியை கண்டு மகேசனின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்துள்ளனர்.
அவ்வகையில் மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவியும் பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி தங்கராணி, மகேசனின் குடும்பத்தினரைச் சந்தித்து நிலவரங்களை கண்டறிந்தார். அதோடு பள்ளிக்கூடம் பயிலும் மகேசனின் பிள்ளைகளுக்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு (Tuisyen Class) ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
மேலும், சமூகநல இலாகா அதிகாரி பார்வதி மகேசனுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மாற்றுத்திறனாளி அட்டை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். 'லைட்அவுஸ் ஹோப்'  இயக்கத்தின் தலைவர் ரிச்சர்ட் லீ-இன் கவனத்திற்குக் கொண்டு சென்று அடிப்படை உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார்.
அதோடு, பேராக் மாநில மைபிபிபி கட்சி இளைஞர் பிரிவின் தலைவர் முகமட் நோர் பட்ஸில் பின் சாகுல் ஹமிட், ஈப்போ பாராட் தொகுதி மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் புவன் ஆகியொர்   மகேசனின் இல்லத்திற்குச் சென்று நிலவரங்களை கண்டறிந்து, அவருக்கு சிறு உதவிகளை வழங்கினர்.

செனட்டர் பதவி: மக்களின் வாழ்வாதாரத்திற்கு 'சிங்கமாக' கர்ஜிக்க வேண்டும்- கி.பா.வேலாயுதம்

ரா.தங்கமணி

ஈப்போ-
 ஐபிஎப் கட்சியின் நீண்டகால கோரிக்கையான செனட்டர்  பதவியை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஏற்கவுள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சியை தருவதோடு டத்தோ சம்பந்தனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முனைவர் கி.பா.வேலாயுதம் கூறினார்.

20ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியின் வெற்றிக் கு பாடுபடும் ஐபிஎப் கட்சி, முன்னாள் தேசியத் தலைவர் அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனுக்கு பிறகு செனட்டர் பதவி கேள்விக்குறியானது.

பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள 'செனட்டர்' பதவி, காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டாலும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.
'செனட்டர்' பதவியை ஏற்கவிருக்கும்  டத்தோ சம்பந்தன், இக்கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்ய ஆக்ககரமான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.

அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதன் இக்கட்சியை தோற்றுவித்தார். அவரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் டத்தோ சம்பந்தன் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மக்களின் மேம்பாட்டுக்கும் வாழ்வாதார சூழலுக்கும் எந்தவொரு செனட்டரும் முன்வைக்காத கோரிக்கைகளை எழுப்பி 'கர்ஜிக்கும் சிங்கமாக'  டத்தோ சம்பந்தன் திகழ்ந்திட வேண்டும்.

அப்போதுதான்  பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் கண்டதற்கு ஓர் அர்த்தம் இருக்கும் என பெர்மாசிப் இயக்கத்தின் பேராக் மாநில பெர்மாசிப் தலைவருமான கி.பா.வேலாயுதம் கூறினார்.

சிறைச்சாலைக்குச் சென்று கொண்டிருந்த அன்வாரின் கார் விபத்துக்குள்ளானது

சுங்கை பூலோ-
சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு செல்லும் வழியில் எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாகனம் விபத்துக்குள்ளானது.

கடந்த நான்கு நாட்களாக கோலாலம்பூர் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சை முடிந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சுங்கை பூலோ, செளஜானா உத்தாமாவில் நிகழ்ந்தது என அவரின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா கூறினார்.

சிறைச்சாலை அதிகாரி ஓட்டிச் சென்ற இந்த வாகனம் மற்றொரு
வாகனத்துடன் மோதுவதை தவிர்த்தபோது விபத்துக்குள்ளானது. செளஜானா உத்தாமா சமிஞ்சை விளக்கு சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்து.

இதில் அன்வார் காயமடையவில்லை. சுங்கை பூலோ சிறைச்சாலை மருத்துவரின் சோதனைக்குப் பிறகு வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார் என அவர் சொன்னார்.

ஆஸ்ட்ரோ கலைஞர்களுடன் பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்ட ‘என்றுமே ராஜா’ கலைநிகழ்ச்சி


ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி இனிதே தொடங்கி எதிர்வரும் 24-ஆம் தேதி வரை ஜிஎம் கிள்ளான் வாளகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

முதல் Astro Circle ஏற்றி நடத்திய புதையல் தேடும் போட்டி, ஆடை அலங்காரம், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு என பல நிகழ்ச்சிகள் காலை தொடங்கி மாலை வரை இடம்பெற்றது.



அதன் பிறகு, இரவு 7 மணிக்கு என்றுமே ராஜாஎனும் கலைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில், பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். அதுமட்டுமின்றி, நம் உள்ளூர் கலைஞர் சதிஸ் மற்றும் மகேனுடன் இணைந்து பாடி அவர்களைப் பாராட்டவும் செய்தார். இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ உலகம் முகநூலில் இடம்பெற்றது.

எதிர்வரும் 23-ஆம் தேதிபின்னணி  பாடகி ஹரிணி கலந்து கொள்ளும் தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி  இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கலைஞர்களின் அசத்தலான படைப்புகளைக் கண்டு களிக்கலாம்.


மேல்விவரங்களுக்கு www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam அகப்பக்கங்களை நாடுங்கள்.