Wednesday 5 May 2021

சுயநல அரசியலுக்காக போலீஸ் சிறப்பு பிரிவை பயன்படுத்த முயன்றார் ஹம்சா ஸைனுடின்- முன்னாள் ஐஜிபி

கோலாலம்பூர்-

உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் பிரிவின் புதிய இயக்குனரை நியமனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் குற்றஞ்சாட்டினார்.



தனது சொந்த அரசியல் நோக்கத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் சிறப்பு போலீஸ் பிரிவுக்கு நெருக்குதல் கொடுத்தார். எதற்காக அவர் நெருக்குதல் கொடுத்தார் என்பதை நான் வெளியிட முடியாது. ஆனால் அது தேசிய பாதுகாப்பு நடவடிக்கைக்கானது அல்ல என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இதற்கு சிறப்பு போலீஸ் பிரிவும் எதிர்ப்பு தெரிவித்தது.

தமக்கு வேண்டிய உயர் அதிகாரியை புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குனராக நியமிப்பதற்கு ஹம்சா விரும்பினார். அதற்கேற்ப பிப்ரவரி 16ஆம் தேதி நடப்பு இயக்குனரை உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அழைத்து சுயவிருப்பத்தின் பேரில் இப்பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதே இதற்கு ஆதாரமாகும். இல்லாவிட்டால் ஒரு மாத நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஹம்சா ஸைனுடின் நடவடிக்கை குறித்து பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த டான்ஶ்ரீ முஹிடின் யாசினிடமும் தெரிவிக்கப்பட்டது.சிறப்பு போலீஸ் பிரிவை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை முஹிடின் யாசின் ஏற்றுக் கொண்டதை அறிந்த ஹம்சா ஸைனுடின் ஆத்திரம் அடைந்தார். பின்னர் கடந்தாண்டு ஓய்வு பெற்ற சிறப்பு பிரிவின் முன்னாள்உயர் அதிகாரியுடன் மட்டுமே அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

ஜூன் மாதத்திற்குள் தமக்கு வேண்டிய அந்த அதிகாரியை எப்படியாவது சிறப்பு பிரிவு இயக்குனராக நியமனம் செய்து விட வேண்டும் என்று ஹம்சா முனைப்பு காட்டினார். முஹிடின் யாசின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அப்பிரிவின் நடப்பு இயக்குனர் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கிறார்.

ஹம்சா ஸைனுடினின் ஓராண்டுகால நடவடிக்கையில் ஒட்டுமொத்த போலீஸ் சிறப்பு பிரிவு அதிருப்தி அடைந்திருப்பதாக டான்ஶ்ரீ ஹமிட் படோர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment