Thursday 17 September 2020

பெண்களின் பொருளாதார ஈடுபாடு நாட்டை மீட்சியுறச் செய்யும்- டத்தோஶ்ரீ அஸாலினா

ரா.தங்கமணி

படங்கள்: வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலும் அதனால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கலையவும் பெண்கள் தொழில்துறைகளில் கால்பதிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் வலியுறுத்தினார்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதேபோல் வர்த்தக, தொழிலியல் துறைகளிலும் பெண்கள்  சாதனை புரிய வேண்டும்.

தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் மலேசியாவின் பொருளாதாரமு  பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதிலிருந்து நாடு மீண்டு வர பெண்களும் சொந்த வர்த்தக, தொழில் துறையில் ஈடுபட வேண்டும். இத்தகைய முயற்சி தங்களின் குடும்ப வருமானத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் வழிவகுக்கும்.

பெண்கள் வர்த்தகத் துறையில் ஈடுபட விரும்பினால் அதற்கு வழிகாட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் துணை புரிகின்றன. அமானா இக்தியார், தெக்குன் போன்ற மைக்ரோ கடனுதவி திட்டங்களின் வாயிலாகவும் பெண்கள் தங்களது வர்த்தக வாய்ப்புகளுக்கு அடித்தளமிடலாம். 

ஏற்கெனவே பல்வேறு வர்த்தகத் துறைகளில் ஈடுபடும் பெண்கள் தங்களை இன்னும் மேம்படுத்ததிக் கொண்டு வர்த்தகத்துறையில் சாதனை புரிபவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளனம் (மைக்கி) வழிகாட்டும் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கக்கூடியதாகும் என்று அண்மையில் மைக்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண் தொழிலியல் முனைவர்களுக்கான ராக்கான் மைக்ரோ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியப் பெண்களையும் சிறந்த தொழில் முனைவர்களாக உருமாற்றும் மைக்கியின் நடவடிக்கைக்கு இந்தியப் பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதும் ராக்கான் மைக்ரோ திட்டத்தின் வழி அவர்களை வர்த்தகத் துறையில் ஊக்குவித்து மேலும் சிறந்தவர்களாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மைக்கியின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment