Monday 14 September 2020

டான்ஶ்ரீ விக்கியிடம் தாக்குப் பிடிப்பாரா கேசவன்?

லிங்கா

சுங்கை சிப்புட்-

அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்  சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி தீவிர சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் அதிரடியில் இத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தாக்கு பிடிப்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அதிர்ஷ்டத்தின் வழி சுங்கை சிப்புட்டில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி கொடி நாட்டிய கேசவன், தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ள தெரியாதவராக மாறி போனதுதான் காலக்கொடுமையாகும்.

மக்களுக்கு சேவையாற்றுவதிலிருந்து விலகி, கட்சி, அரசியல், சுயநலப்போக்கு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தற்போது எதற்கும் தகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினராக திகழும் கேசவனை நம்புவதை விட, பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சுங்கை சிப்புட் தொகுதியில் நானே போட்டியிடுவேன் என்று தில்லாக, கெத்தாக மாஸ் காட்டி களமிறங்கியிருக்கும் டான்ஶ்ரீ விக்கியின் பக்கமே சுங்கை சிப்புட் மக்களின் ஆதரவு அலை வீச தொடங்கியிருக்கிறது எனலாம்.

நிஜ நாடாளுமன்ற உறுப்பினரை காட்டிலும் நிழல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு செல்லாத இடமில்லை, போகாத பாதையில்லை என்று டான்ஶ்ரீ விக்கியின் தினசரி அட்டவணை பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. இதில் மக்கள் சந்திப்பு, சுகாதார நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள், சமய நிகழ்வுகள் என பட்டியல் நீண்டுக் கொண்டிருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தலில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்து புதிய வேட்பாளரை களமிறக்கினால் போட்டி கடுமையானதாக இருக்கும். 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரு தவணைகள் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற செல்லாக்காசாகி விட்ட கொள்கையை பிகேஆர் பிடித்து தொங்கி கிடக்குமானால் டான்ஶ்ரீ விக்கி வேட்புமனுவை தாக்கல் செய்து  பிரச்சாரம் கூட செய்ய தேவையில்லை. வெற்றி அவர் வீட்டு வாசல் கதவை தட்டும்.

No comments:

Post a Comment