Tuesday 6 November 2018

சகல வளங்களும் நிறைந்திருக்கட்டும் - டத்தோஶ்ரீ தனேந்திரன்


கோலாலம்பூர்-
சகல நலன்களையும் வளங்களையும் அள்ளித் தரும் மங்கல திருநாளான தீபாவளி திருநாள் அனைத்து மக்களுக்கு நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மனிதனையும் நன்னெறிப்படுத்தி, மனிதநேயத்துடன் வழி நடத்திச் செல்லும் மாபெரும் ஆற்றல் படைத்தது யாதெனில் சமயம் ஒன்று மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமய வழியில், இறை பாதையில் செல்லும் ஒருவன் தினமும் தீபாவளி திருநாளைக் கொண்டாடுவான் என்பதும் சர்வ நிச்சயம்.

தெய்வ சக்தி தீய சக்தியினை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கிய அந்த திருநாளே இன்று நாம் கொண்டாடி மகிழும் தீபத்திருநாளாகும். தீயசக்தியாக நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல் எண்ணங்களை விதைப்பதே தெய்வ சக்தியாகும். நமக்கு ஏற்படும் இடர்களை தகர்த்து, நன்மைகளை அளித்து  என்றும் காத்து நிற்பது நமது தெய்வம் மட்டுமே.

தீபாவளி என்றால் இருளை நீக்கும் ஒளி என்றும் விளக்கம் தருவர் பெரியோர். அவ்வகையில் நம் மனதில் இருக்கும் இருளை நீக்கும் வல்லமை படைத்த ஒளி இறைவன் ஒருவனே அன்றி வேறு எந்த சக்தியும் இல்லை என்பது சான்றோர் வாக்கு.

எனவே, 2018ஆம் ஆண்டு தீபாவளி பெருநாளை தெய்வச் சிந்தனையோடு மது இல்லா தீபாவளியாகவும் கொண்டாட மலேசிய மக்கள் சக்தி கட்சி மனம் நிறைந்து வாழ்த்துகிறது என்று தமது வாழ்த்துச் செய்தியில் டத்தோஶ்ரீ தனேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment