Wednesday, 24 October 2018

சிறந்த எதிர்க்கட்சியாகவும் வலுவான கட்சியாகவும் மஇகாவை உருமாற்றவோம்- டத்தோ சிவராஜ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்ற மஇகாவை வலுபடுத்துவதே தனது முதல் பணி என்று உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோ சி.சிவராஜ் தெரிவித்தார்.

மஇகாவின் இன்றைய சூழலில் கட்சியை வலுப்படுத்துவதே முக்கியமாக உள்ளது. அதற்குரிய வேலைகளை முன்னெடுப்பதே இன்றைய அவசியமாக பார்க்கப்படுகிறது.

மஇகா சிறந்த எதிர்க்கட்சியாக திகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஆளும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய  திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மஇகாவின் குரலாக எதிரொலிப்பேன் என்று டத்தோ சிவராஜ் கூறினார்.

இந்திய சமுதாயத்திற்காக தற்போது ஆளும் அரசாங்கம் மேர்கொள்ளும் நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டியதாகும். இன்னும் ஒரு வாரத்தில்  2019க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய சமுதாயத்திற்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து குரல் எழுப்புவேன்.

இந்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்காக கூடுதலான திட்டங்கள் வகுக்கப்படுமா? பழைய திட்டங்களே தொடரப்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இவையனைத்திற்கும் மேலாக மஇகாவை  மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக உருமாற்றுவது அவசியமான ஒன்றாகும். கட்சியின் தேசியத் தலைவர், துணைத் தலைவர், இதர உதவித் தலைவர்கள், செயலவை உறுப்பினர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய அனைத்துத் தரப்பினருடனும் கைகோர்த்து பணியாற்றுவதோடு அடுத்த பொதுத் தேர்தலுக்குள் மஇகாவை வலுவான கட்சியாக உருமாற்றும் திட்டங்கள் வகுக்கப்படும் என்று 'பாரதம்' மேற்கொண்ட சிறப்பு நேர்காணலில் டத்தோ சிவராஜ் இவ்வாறு கூறினார்.

Tuesday, 23 October 2018

அங்கீகரிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இணைந்து பணியாற்றுவதில் தயக்கமில்லை- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகம் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஒத்துழைத்து பணியாற்றுவதில் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

ஹைகோம் (சீபில்ட்) ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில்  கா.செல்லப்பா, மே.நாகராஜன் ஆகிய இருவரில் யார் அங்கீகரிக்கப்பட்ட  தலைவர் என்ற வழக்கில் 11/3/2014இல் செல்லப்பா அணியினரே அங்கீகரிக்கப்பட்ட அணியினர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகமாக செல்லப்பா அணியினர் திகழும்போது அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப மாநில அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

செல்லப்பா, நாகராஜன் இவ்விருவரில் யார் அங்கீகரிக்கப்பட்ட அணியினராக நீதிமன்றம் அறிவித்திருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் தயக்கம் காட்டபோவதில்லை.

நீதிக்கு உட்பட்டு எனது செயல்பாடுகள் அமையும் நிலையில் சீபில்ட் ஆலயத்தை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை ஒருபோதும் பின்வாங்கப்படாது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு மேம்பாட்டு நிறுவனமான ஓன் சிட்டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆலயத்திற்கு நிலமும் மானியமும் வழங்கப்பட்ட நிலையில் இப்போது அதனை திசை திருப்பும் வகையில் சில தரப்பினரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இவ்வாலயம் உடைக்கப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாலயம் புதிய இடத்தில் இந்து சமய ஆகமவிதிபடி பாலஸ்தாபனம் செய்யப்படும் என்பதே உண்மையாகும் என கணபதிராவ் கூறினார்.

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது மக்களின் உரிமை- துன் மகாதீர்


கோலாலம்பூர்-
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

எனக்கு பிறகு நாட்டை தலைமையேற்று வழிநடத்தக்கூடிய சிறந்த தலைவர் யார் என்பதை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

எனக்கு பிறகு டத்தோஶ்ரீ அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.

ஆனால் யாரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் குரல் கொடுக்கலாம்.  மக்கள் அப்பதவிக்கு வேறொருவரை விரும்பினால் அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்.

நீண்ட நாட்களுக்கு இப்பதவியை நான் பிடித்து கொண்டிருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.

என்னை விட சிறந்த ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று என்னால் வாக்குறுதி அளிக்க முடியாது.  ஏனெனில் முன்பு துன் அப்துல்லா அஹ்மாட் படாவியிடம் ஒப்படைத்தேன். அவர் ஒரு சமயவாதியாக இருந்தாலும் நடந்ததை எண்ணி பாருங்கள்.

அவருக்கு பிறகு வந்த டத்தோஶ்ரீ நஜிப், முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் புதல்வராக இருந்தாலும் என்ன நடந்தது என்பதை பாருங்கள் என்று செக்‌ஷன் 15இல் நடைபெற்ற துன் மகாதீருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மஇகா உதவித் தலைவராக டத்தோ முருகையா; எவ்வாறு சாத்தியமானது?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நடந்து முடிந்த மஇகா தேர்தலில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ.முருகையா உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் (12ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்)  துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோ முருகையை பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி மஇகாவில் இணைந்தார்.

துணை அமைச்சராக பதவி வகித்திருந்த போதிலும் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்ததால் எவ்வித பதவிகளையும் அடைய முடியாமல் தனித்து விடப்பட்டார்.

இந்நிலையில், மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில் உதவித் தலைவருக்கு போட்டியிட்ட டத்தோ முருகையா வெற்றி பெற்றார்.

வேறொரு கட்சியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் விலகி இன்று மஇகாவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக டத்தோ முருகையா எவ்வாறு வர முடிந்தது? என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக இருக்கும் மஇகா  மீண்டும் எழுச்சி பெற சிறந்த சேவையாளர்களை உள்ளடக்கிய தலைமைத்துவம் அவசியம் என்பதை மஇகாவினர் உணர்ந்திருப்பதே இதற்கு காரணம் என கூறலாம்.

பிரதமர் துறையின் துணை அமைச்சராக பதவி வகித்தபோது டத்தோ முருகையாவின் சேவைகள் சிறந்த முறையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளால் பொது புகார் பிரிவு புத்துயிர் பெற்றிருந்தது.

இத்தகைய துரிதமான செயல்பாடுகள் ம இகாவின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவே இன்று அக்கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணியாக அமைந்துள்ளன.

மஇகாவினர் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி கூறி கொள்ளும் அதே வேளையில் ம இகாவின் எழுச்சி பெற்ற கட்சியாக உருவாக்கம் காண்பதற்கு தேசியத் தலைவருடன் கரம் கோர்த்து செயல்படவிருப்பதாக டத்தோ முருகையா கருத்து தெரிவித்திருந்தார்.

மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிட்டனர். அதில் டத்தோ டி.மோகன், டத்தோ சி.சிவராஜா, டத்தோ முருகையா ஆகியோர் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொழில்துறைகளை நவீனப்படுத்துவதில் எம்டியூசி பங்காற்ற வேண்டும்- சிவநேசன்


ரா.தங்கமணி
ஈப்போ-
மலேசியத் தொழிலாளர்களுக்காக போராடும் அதே வேளையில் அவர்களை நவீனப்படுத்தும் பொறுப்பும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (எம்டியூசி) உண்டு என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

அந்நியத் தொழிலாளர்களை குறைப்பதற்காக 11ஆவது மலேசியத் திட்டத்தில் தொழில்துறையை நவீன மயமாக்குவது தொடர்பில் பிரதமர் துன் மகாதீர் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

அந்நியத் தொழிலாளர்களை குறைக்க  உற்பத்தி, தோட்டத்துறைகளை நவீனமயமாக்கும் ஆலோசனையை துன் மகாதீர் பரிந்துரைத்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த எம்டியூசியின் தலைமைச் செயலாளர் ஜோ.சோலமன், இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என கூறியிருந்தார்.

மலேசியத் தொழில்துறையை நவீனப்படுத்தும்போது அங்கு அந்நியத் தொழிலாளர்கள் ஆதிக்கம் குறைக்கப்படும். அதோடு, உற்பத்தி, தோட்டத் துறைகளை நவீனப்படுத்தும் போது அதனால் உள்நாட்டினர் ஈர்க்கப்பட்டு இத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இன்று தோட்டத்துறைகளில் 75 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். நவீனமயமக்கால் இத்துறைகளில் ஊடுருவும்போது அங்கு அதிகமான உள்நாட்டினர் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகிறது.

மேலும், இயந்திர தொழில்நுட்பத்தின் ஐவர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் மேற்கொள்ளும்போது அதனால் தொழில்நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதோடு அவர்களுக்கு முறையான சம்பளம், இபிஎப், சொக்சோ போன்ற சலுகைகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

தேசிய தொழிற்சங்கம் என்ற நிலையில் தொழிலாளர்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காமல் தொழில்துறைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் எம்டியூசியின் முன்னாள் உதவித் தலைவரும் பேரா மனிதவள பிரிவுக்கு பொறுப்பேற்றிருப்பவருமான சிவநேசன் வலியுறுத்தினார்.

சீபில்ட் மாரியம்மன் ஆலயம்: இடமாற்றமே; உடைக்கப்படவில்லை - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைகோம் (சீபில்ட்) மகா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படவில்லை; மாறாக இடமாற்றமே செய்யப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் என கூறப்படும் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட கா.செல்லப்பா தலைமையிலான நிர்வாகக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதால் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது. மாறாக, சில தரப்பினர் கூறுவதுபோல் இந்த ஆலயம் உடைக்கப்படவில்லை.

தற்போதைய சீபில்ட் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு ஏதுவாக யுஎஸ்ஜே 23ஆவது கிலோமீட்டரில் 1 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளதோடு புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு 15 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய இடத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு இந்து ஆகம் முறைப்படி தெய்வச் சிலைகள் பாலஸ்தாபனம் செய்வதற்கு ஏதுவாக செல்லப்பா குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதனை சிலாங்கூர் மாநில அரசு ஏற்று அதற்கேற்ப செயல்படுகிறது.

இவ்விவகாரத்தின் எந்தவொரு தரப்பினர் பக்கமும் சாய்ந்திடாமல் நடுநிலையோடு செயல்படுகிறோம். நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டு யார் இணங்கினால் அதனை மாநில அரசு ஏற்று செயல்படும். அதன் அடிப்படையில்தான் செல்லப்பா அணியினருடன்  ஆலய இடமாற்றப் பணிக்கு உட்படுகிறோம் என்று இன்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கணபதிராவ் கூறினார்.

இவ்விவகாரத்தின் உண்மை நிலையை மறைத்து சில தரப்பினர் மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதோடு உண்மை என்னவென்று அறியாத மக்களை பகடைகாயாகவும் பயன்படுத்துகின்றனர்.

நீதிக்கு உட்பட்டே மாநில அரசு செயல்படும் என்ற நிலையில் அங்கீகரிக்கப்பட்ட செல்லப்பா தலைமையிலான குழுவினருடன் இணைந்து செயல்படும் வேளையில் சமய ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆலய இடமாற்றம் இடம்பெறும் என்று அவர் சொன்னார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷாண், செல்லப்பா குழுவினர், மேம்பாட்டு நிறுவனத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Monday, 22 October 2018

தேர்தலில் முறைகேடுகள்; ஆட்சேபம் தெரிவித்தார் டான்ஶ்ரீ ராமசாமி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் பல்வேறு குளறுபடிகளும் அதிகார அத்துமீறலும் நடந்திருப்பதாக துணைத் தலைவர் பதவிக்கு
போட்டியிட்ட டான்ஶ்ரீ எம்.ராமசாமி ஆட்சேபம் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற சில வாக்களிப்பு மையங்களில் டான்ஶ்ரீ ராமசாமியின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை எனவும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனை தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகள் குறித்த தமது ஆட்சேப கடிதத்தை டான்ஶ்ரீ ராமசாமி நேற்று அக்கட்சியின் தலைமைச் செயலாளரிடம் வழங்கினார்.

மஇகாவின் துணைத் தலைவரானார் டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகாவின் துணைத் தலைவர் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணம் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

நேற்று (அக்.20) நடைபெற்ற மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ சரவணனும் தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.ராசமாமியும் போட்டியிட்டனர்.

இதில் டத்தோஶ்ரீ சரவணன் 8,242 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டான்ஶ்ரீ ராமசாமிக்கு 4,716 வாக்குகளே கிடைத்தன

3,500 வாக்குகள் பெரும்பான்மையில் டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 21 October 2018

மைக்கி தேர்தல்; டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரனை தோற்கடித்தார் டத்தோ கோபால்



ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் கூட்டமைப்பு சம்மேளனத்தின் (மைக்கி) தலைவராக பினாங்கைச் சேர்ந்த டத்தோ கோபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரடி மோதலை ஏற்படுத்திய இத்தேர்தலில் டத்தோ கோபால் 111 வாக்குகள் பெற்ற நிலையில் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன்  76 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ராஜகேசரனும் உதவித் தலைவர்களாக டத்தோ சுப்பிரமணியம்,எம்.கேசவன், டலிஃப் சிங் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மைக்கியின் தலைமைச் செயலாளராக டத்தோ ஏ.டி.குமாரராஜாவும் பொருளாளராக ஶ்ரீகாந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Saturday, 20 October 2018

ஜீவி பிரகாஷ் கலைநிகழ்சசியை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகிறது ஆஸ்ட்ரோ


கோலாலம்பூர்-
இவ்வாண்டு  தீபாவளி கொண்டாடத்தை இன்னும் மெருகூட்டும் வகையில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுடன் ராகா, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பல சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். திரைப்படங்கள், நாடகங்கள், இசை கலைநிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட, ஆஸ்ட்ரோ கோ, என்ஜோய், என்ஜோய் செயலி வாயிலாக கண்டு களிக்கலாம்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்.டி (அலைவரிசை 233) நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க சாம்ராட் பேக் சந்தாதாரராகி எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி ஷா ஆலாம் மெலாவத்தி அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜீவி பிரகாஷ் கலைநிகழ்ச்சிக்கான பிரத்தியோக நுழைவுச் சீட்டுகளைப் பெற்று கொள்ளலாம். அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அலைவரிசை 200 அணுகி சாம்ராட் பேக் சந்தாதாரராகி இந்நுழைவுச் சீட்டுகளைப் பெறலாம். சாம்ராட் பேக் குறித்த மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/samrat அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஆஸ்ட்ரோ வானவில், ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை, ஆஸ்ட்ரோ தங்கத்திரை, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி, தாரா எச்.டி, போலிஒன் எச்.டி போன்ற அலைவரிசை  பல்வகை அசத்தலான நிகழ்ச்சிகளைக் கொண்டு வரவுள்ளது.

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)
• அருண் விஜய் உடன் தீபாவளி கொண்டாட்டம், ராஜா vs ரஹ்மான், வெவ்வேறு ரூபம், தீபாவளிக்கு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ராகா, பிருந்தாவனத்தில் கண்ணன் மற்றும் வசந்த விலாஸ். 

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202)
• நடிகையர் திலகம், மெரசல், யு டர்ன், வேலாயுதம், பிரம்மாண்ட் நாயகன், வேல் போன்ற திரைப்படங்கள்.

ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241), ஆன் டிமாண்ட்
• கஜினிகாந்த் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் காணலாம்.
• ஆன் டிமாண்டில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், வேலைக்காரன், திருட்டு பயலே.
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (அலைவரிசை 231)
• இரும்புத் திரை, காலா, பரத் எனும் நான், பாகமதி, பெட்டிக்குள் என்ன சீசன் 3,   One Heart: AR. Rahman மற்றும் மொஜோ கலைநிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ தாரா எச்.டி (அலைவரிசை 108)
• ஷாரு கான் நடிப்பில் வெளிவந்த Kabhi Kushi Kabhie Gham, Kuch Kuch Hota Hai, Kabhi Alvida Naa Kehna, Duplicate மற்றும்  Kal Ho Naa Ho

ஆஸ்ட்ரோ போலிஒன் எச்.டி (அலைவரிசை 251)
• Padman மற்றும் Veere Di Wedding எனும் திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.
ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் ‘நம்ம தீபாவளி’ www.astroulagam.com.my/NammaDeepavali எனும் பிரத்தியோகமான மைக்ரோசைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்பட கலைஞர்களின் நேர்காணல்கள், தீபாவளி பலக்காரங்கள் செய்யும் வழிமுறைகள் என பல தகவல்கள் இந்த அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

இதைத் தவிர்த்து, முதல் முறையாக ராகா 5 அத்தியாயங்கள் கொண்ட வானொலி நாடகத்தை தயாரித்துள்ளார்கள். இந்நாடகம் எதிர்வரும் அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒலியேறும். அதுமட்டுமின்றி, ஜெய் இசைமைப்பில் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடிய தீபாவளி பாடலும் விரைவில் ராகாவின் அதிகாரப்பூர்வ சமூக வளத்தளங்களில் வெளியிடப்படவுள்ளது.

மேல் விவரங்களுக்கு www.raaga.my அல்லது www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.






Tuesday, 16 October 2018

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலில் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டத்தோஶ்ரீ அன்வார், இன்றுக் காலை மக்களவை சபாநாயாகர்  முகமட் அரிஃப் முகமட் யூசோப் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியேறி அரச மன்னிப்பு பெற்ற டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு ஏதுவாக போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

பேரா ஜசெக; துணைத் தலைவர் சிவகுமார், உதவித் தலைவர் சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில ஜசெக தேர்தலில் ஙா கோர் மிங் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், உதவித் தலைவராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சி கிளைகளின் நிர்வாக செயலாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டார்.

பேரா மாநில ஜசெகவின் தேர்தல் நேற்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி பயத்தில் பொய் பிரச்சாரமா? சட்ட நடவடிக்கை பாயும்- டான்ஶ்ரீ ராமசாமி எச்சரிக்கை


ரா.தங்கமணி

ஈப்போ-
விரைவில் நடைபெறவுள்ள மஇகா தேர்தலில் தோல்வி கண்டு விடுவோம் என்ற பயத்தினாலே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சில தரப்பினர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் என்று தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.இராமசாமி தெரிவித்தார்.

கட்சி உருமாற்றம் பெற வேண்டும். இழந்து கிடக்கும் இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே  மஇகாவின் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட முனைந்துள்ளேன். ஆனால், என்  மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தி பொய் பிரச்சாரம் செய்ய சில தரப்பினர் முனைந்துள்ளனர்.

மஇகாவின் முன்னாள்  தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமைத்துவத்தின்போது பேரா மாநில மஇகா தலைவராக நான் நியமனம் செய்யப்பட்டேன்.

இக்காலகட்டத்தின்போது கட்சியின் பணம் 7 லட்சம் வெள்ளியை வேறொரு வங்கியின் டெபாசிட் செய்து அதிக லாப ஈவு பெறுவதற்கு வழிவகை செய்தேன். ஆனால் அந்த பணம் மாயமாகி விட்டதாக சில தரப்பினர் இப்போது பிரச்சாரம் செய்து வருவதாக கேள்விபட்டேன்.

என்னுடைய தலைமைத்துவத்தின்போது அந்த பணம் மாயமாகி விட்டது உண்மையென்றால் ஏன் இந்த இரண்டு ஆண்டுகள் என்னிடம் இது குறித்து எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை என்னை அழைத்து பேசாதவர்கள் இப்போது தங்களது தேர்தல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இந்த 7 லட்சம் வெள்ளியின் நிலை என்னவென்பது குறித்து முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியமும் இந்நாள் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் நன்கு அறிவர்.

ஆதலால், தோல்வி பயத்தில் என் மீது அவதூறு பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று நேற்று பேரா மாநில  மஇகா தலைவர்களுடனான சந்திப்பின்போது மஇகா தேசிய துணைத் தலைவர் வேட்பாளருமான டான்ஶ்ரீ ராமசாமி இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் 7 லட்சம் வெள்ளிக்கான ஆதாரங்களை அனைவர் முன்னிலையிலும் அவர் வெளிபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.