Monday, 11 May 2020

பிகேபிபி: ஜூன் 9 வரை நீட்டிப்பு

புத்ராஜெயா-
நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி)  4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
மே 12ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த பிகேபிபி ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கு எதிரான போராட்டம் இன்னும் ஓய்ந்திடாத நிலையில் தர நிர்ணய கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.

Saturday, 9 May 2020

தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் வீரன்

ரா.தங்கமணி

தைப்பிங்-
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன்  தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்துள்ள நிலையில் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வீரன், தைப்பிங் வட்டார மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றவிருப்பதாகவும் இவ்வாய்ப்பை தமக்களித்த மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஏற்கெனவே ஈப்போ மாநகர் மன்றத்தின் உறுப்பினராக பதவி வகித்த வீரன், அச்சமயத்தில் புந்தோங் வட்டார மக்களின் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; மகாதீரின் பரிந்துரை ஏற்பு

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் வகையில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுவின் பரிந்துரையை மக்களவை சபாநாயகர் முகமட்
அரிஃப் முகமட் யூசோப் ஏற்றுக் கொண்டார்.
மக்களவை கூட்டத் தொடர் நடைமுறைகளின் 27ஆவது விதியின்படி துன் மகாதீருக்கு முகமட் அரிஃப் பதிலறிக்கை அனுப்பியுள்ளார்.

மானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நிர்வாகங்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டிலுள்ள ஆலயங்கள் வெறும் மானியத்தை பெறுவதில் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மக்கள் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இந்துக்களிடையே சமய நன்னெறியை போதிக்கவே ஆலயங்கள் செயல்படுகின்றன. ஆனால்  சமயத்தை தாண்டியும் சமூகம் என்ற ஒரு கடப்பாட்டை ஆலயங்கள் மறந்து விடக்கூடாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதில் பி40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினர் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர்.

இத்தகைய மக்களுக்கு உதவிடும் வகையில் பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் பெளத்த ஆலயங்களும் பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இதுபோன்று நாட்டிலுள்ள பல ஆலயங்களும் தங்களது வட்டாரத்திலுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவது மகிழ்ச்சிகரமானதாகும். அத்தகைய ஆலய நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள்.

ஆனால், இதில் சில ஆலயங்கள்  வெறும் மானியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வேதனையளிக்கிறது. மக்கள் சேவையில் முனைப்பு காட்டாமல்  மானியத்திற்காக மட்டுமே அவ்வாலயங்கள் செயல்படுவது வேதனைக்குரியதாகும்.

ஒரு பேரிடர் சம்பவமாக கருதப்படுகின்ற இத்தகைய சூழலில் கூட பொதுநலத்தை கருதாமல் சுயநலமாக செயல்படும் ஆலயங்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும் என்று செக்‌ஷன் 18இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பி40 பிரிவினருக்கு  மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் கூறினார்.

இந்நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா, ஷா ஆலம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் யுகராஜா, சுந்தரம், இந்திய சமூகத் தலைவர்கள் முரு, கோபி, பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்வரிசை பணியாளர்களின் தியாகத்தை சித்திரமாக வரைந்து போற்றுவோம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

பட்டர்வொர்த்-
உலகத்தையே உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை காக்க மருத்துவப் பணியார்களும் அதிலிருந்து மக்களை காக்கப் போராடும் போலீஸ், ராணுவப் படையினர் உட்பட அனைத்து முன்வரிசை பணியாளர்களின் சேவையையும் நாம் அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

முன்வரிசை பணியாளர்களின் சேவைய போற்றும் வகையில் அனைத்து மலேசியரும் தங்களது வீட்டின் முன்புறம் முன்வரிசை பணியாளர்களின் ஓவியங்களை வரைந்து வைக்க வேண்டும்.

உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில்  மக்களை பாதுகாக்க முன்வரிசை பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கியிருக்கும் இந்த பிரச்சாரம் நாடு தழுவிய நிலையில் மக்களிடம் கொண்டுச் சேர்க்கப்படும்.

நாட்டுக்கு அவர்கள் ஆற்றுகின்ற பங்களிப்பை சித்திரத்தின் வாயிலாக நாம் போற்றி கொண்டாடுவோம் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

கோவிட்-19; கல்லூரி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் டத்தோ ஏகே தேவராஜ்

ஷா ஆலம்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் கல்லூரி விடுதியிலேயே தங்க நேர்ந்த மாணவர்களுக்குத் தொழில் அதிபர் மற்றும் சமூகச் சேவகர் டத்தோ ஏகே தேவராஜ் வேல் உணவுப் பொட்டலங்களை வழங்கி உதவினார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் ஷா ஆலம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஸ் மெக்காட்ரோனிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களது வீடுகளுக்குச் திரும்ப முடியாமல் கல்லூரியிலேயே தங்கினர்.

இம்மாணவர்கள் எதிர்நோக்கிய போதிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் இம்மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள வழங்கி உதவினார்.

Tuesday, 5 May 2020

பிபிகேபி- அடகுகடைகளில் அணிதி்ரண்ட மக்கள

பெட்டாலிங் ஜெயா-
கோவிட்-19 வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் (எம்சிஓ) சில தளர்வுகளை அரசாங்கம் வழங்கிய பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கிய அடகுகடைகளில் மக்கள் அணி திரண்டனர்.
எம்சிஓ காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.

இன்று முதல் தொழில், வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என்று அரசாங்கம் அறிவித்ததால் அடகுகடைகள் செயல்பட தொடங்கியது தங்களது நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மக்கள் நகைகளை அடகு வைத்து பணம் ஈட்ட அணி திரண்டனர்.

மலாக்காவிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் மக்கள் அடகுகடைகள் முன்பு திரண்ட புகைப்படம், காணொளி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகின.

உலக மக்களை பீதிக்கு ஆளாக்கி வரும் கோவிட்- 19 மக்களை மருத்துவமனைக்கும் கல்லறைக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது என நினைத்தால் இப்போது அடகுகடை முன்பும் நிற்கவைத்துள்ளது.

கோவிட்-19 இன்னும் என்னென்ன சம்பவங்களை அரங்கேற்ற காத்துக் கொண்டிருக்கிறதோ?

Monday, 4 May 2020

கோவிட்-19: 122 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

கோலாலம்பூர்-
தொழில்துறைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படலாம் என்று பிரதமர் அறிவித்த இரண்டாவது நாளில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்றைய நண்பகல் 12.00 மணி வரையிலுமான நிலவரப்படி 122 புதிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று புதிதாக இருவர் மரணமடைந்த நிலையில், மரண எண்ணிக்கை 105-ஐ எட்டியுள்ளது.

Sunday, 3 May 2020

கோவிட்-19: 16 நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 105ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 நாட்களுக்குப் பின்னர் 100க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக 100க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 105ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதில் 94 பேர் உள்நாட்டவர்கள் என்றும் எஞ்சிய 11 பேர் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.

புதிதாக மரணச் சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யாத நிலையில் மரண எண்ணிக்கை 103ஆக உள்ளது.

மே 4ஆம் தேதி தொடக்கம் தொழில்துறைகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படலாம் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்த இரு நாட்களுக்குள்ளே வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் அதிகரித்துள்ளது.

கோவிட்-19 : சமூகச் சேவையை முன்னெடுத்தது டோவன்பி தோட்ட மாரியம்மன் ஆலயம்

சுங்கை சிப்புட்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்கு உதவும் வகையில் சுங்கை சிப்புட், டோவன்பி தோட்ட ஸ்ரீ மகா மாரயம்மன் ஆலய நிர்வாகத்தினர. தங்களது சமூகக் கடப்பாட்டினை நிறைவேற்றினர்.

வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இன்றி அல்லல்படும் மக்களின் துயரினை போக்கும் வகையில் இக்குடியிருப்பிலுள்ள 250 பேருக்கு மளிகைப்பொருட்களை வழங்கினர் ஆலய நிர்வாகத்தினர்.

இன, சமய வேறுபாடின்றி இந்தியர்களுக்கு மட்டுமல்லாது மலாய்க்காரர், சீனர்களுக்கும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக ஆலயத் தலைவர் எம்.மனோகரன் தெரிவித்தார்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில் சமூகச் சேவைகளில் ஆலய நிரவாகம் ஈடுபடுவது அவசியமானது எனும் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், இம்முயற்சிக்கு துணை நின்ற ஆலய செயலவையினருக்கும் ஆதரவுகரம் நீட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.

விஷப் பரீட்சையில் களமிறங்குகிறதா மலேசியா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் மூடபட்ட நாட்டின் பொருளாதாரத் துறை மீண்டும் செயல்பட அனுமதியளத்திருப்பதன் வாயிலாக மலேசியா ஒரு விஷப் பரீட்சையில் களம் காண்கிறது.

வரும் 4ஆம் தேதி முதல் தொழில்துறைகள், உணவகங்கள் உட்பட பல துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று அறிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் அளிக்கப்பட்டுள்ள இந்த தளர்வு மலேசியர்களை பேராபத்தில் தள்ளி விடும் விபரீதத்திற்கு அடித்தளமாய் அமையலாம்.

மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு சமூக இடைவெளியே ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இவ்வளவு நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது அறிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் துறை மறு செயல்பாட்டினால் சுருங்கக்கூடும் சமூக இடைவெளிகள் இந்த வைரஸ் இன்னும் அதிவேகத்தில் பரவி மனிதஉயிர்களுக்கு  பேராபத்தாக அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

தொழில்துறை காரணமாக மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் இந்த வைரஸ் தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம். அச்சமயம் தற்போது நாம் சந்தித்து கொண்டிருக்கும் உயிர்பலியை விட பேரழிவை சந்திக்கக்கூடய ஆபத்து உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கும் மனித உயிருக்குமான விஷப் பரீட்சையில் கொரோனா வைரஸ் எதை வீழ்த்தப்போகிறது? என்பதே விடை காண முடியாத கேள்வியாகும்.

Saturday, 2 May 2020

உழைப்பாளர்களின் தியாகத்தாலே இது சாத்தியமானது- பிரதமர் நெகிழ்ச்சி

புத்ராஜெயா-
உழைப்பாளர்களின் தியாகத்தாலே கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.
உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டது.

நாட்டுக்கு இது புது அனுபவமாக இருந்தாலும் அரசாங்கம் அறிவித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மதித்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த காரணத்தினால் இந்த வைரஸ் பரவலை வெகுவாக குறைக்க முடிந்தது.

வேலையிடங்களுக்குச் செல்லாமல் வருமானத்தை இழக்கும் தருவாயிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருந்த காரணத்தினாலேயே இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இது உழைப்பாளர்களின் தியாகத்தால் மட்டுமே சாத்தியமானது என்று தொழிலாளர் தின சிறப்புரை நேரலையில் உரையாற்றியபோது டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்

அடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்

ரா.தங்கமணி
நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமா கலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான கலைஞர்களை உருவாக்கி தந்துள்ளது.

சினிமா துறையில் தான் கொண்டாடப்பட வேண்டுமானால் ரசிகர் பட்டாளம் மிக முக்கியமானது என்பதே உச்சம் தொட்ட நடிகர்களின் எழுதப்படாத விதியாகி போனது.

ஆனால் அந்த விதியை மாற்றி ரசிகனின் பின்னால் மறைந்திருப்பதை விட ரசிகனால் கொண்டாடப்படும் ஒருவனாய் உருவெடுக்க முடியும் என்பது சாத்தியம் என்றால் அந்த புகழ் அனைத்தும் 'தல' என்று ரசிகரால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரையே சாரும்.

ஆம்... ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னை சுற்றி அரசியல் நடப்பதை விரும்பாத ஏ.கே. எனும் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்பது வரலாறு.

ரசிகர் மன்றம் இல்லையென்றாலும் இன்றளவும் கோடானக்கோடி ரசிகர்களை கொண்ட திரை ஜாம்பவனாக அஜித்குமார் திகழ்வதற்கு காரணம் உழைப்பு... உழைப்பு... உழைப்பு ஒன்று மட்டுமே ஆகும்.

திரை பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் நுழையும் அதே காலகட்டத்தில் எவ்வித திரைபின்புலன்களும் இன்றி திறமையை மட்டுமே முன்னிறுத்தி திரையுலகில் கால்தடம் பதித்தார்.

சினிமாவின் முதல் அறிமுகம் தெலுங்கு மொழி என்றாலும் பின்னர் அமராவதி எனும் திரைப்படத்தின் வழி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

ஆசை, காதல் கோட்டை, வாலி, முகவரி, தீனா, அட்டகாசம், வில்லன், சிட்டிசன் என மாஸ் கலந்த திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கான அடித்தளத்தை ஆழமாக பதிவு செய்தார்.

'தீனா' படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட 'தல' எனும் அடைமொழியே பின்னாளில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மந்திரச் சொல்லாக மாறி போனது.

இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும் தனது பாணி எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு ரசிகனை திருப்திப்படுத்த வேண்டும் எனும் முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக் மூலம் தனது மாஸான கேரக்டரை வெளிபடுத்தினார்.

வீரம், வேதாளம், விஸ்வாசம் திரைப்படங்களின் வழி ரசிகனை மட்டும்  திருப்திப்படுத்தாமல்  தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரையும் கரை சேர்த்தார்.

தன்னை சுற்றி அரசியல் நடப்பதையும் நடத்தப்படுவதையும் விரும்பாத ஏ.கே. ' பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்வில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி முன்னிலையிலே மேடையேறி இந்நிகழ்வுக்கு வரச்சொல்லி கலைஞர்கள் மிரட்டப்படுவதாக துணிச்சலுடன் கூறினார். அஜித்தின் இந்த துணிச்சல் உரையை ஆதரிக்கும் வகையில. ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றது அன்றைய தமிழக அரசியலில் முக்கிய சம்பவமாக பார்க்கப்பட்டது.

தன்னுடைய உழைப்பை மட்டுமே அடித்தளமாக கொண்டு இன்றைய உச்சத்தை தொடுவதற்கு அஜித், கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை.

தன்னம்பிக்கையை பிரதானமாகக் கொண்டு முன்னேற துடிப்பவர்களுக்கு என்றுமே முன்னுதாரணமாய் திகழ்பவர் அஜித்குமார்.

மன 'வலிமை' படைத்தவனால் மட்டுமே பல்வேறு தோல்விகள், காயங்கள், இன்னல்களை கடந்து   சாதிக்க  முடியும் என்பதை நிரூபித்த உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது உங்களின் 60ஆவது படமான 'வலிமை'க்காக தமிழ் சினிமாவும் தமிழ் ரசிகர்களும் காத்துக் கொண்டிருப்பது...

#HappyBirthdayThala